175 ஆண்டுகளாக ராமாயண ஏடு வாசிக்கும் குடும்பத்தார்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2026 11:10
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் 175 ஆண்டுகளாக ந.பழ., குடும்பத்தினர் ராமாயண ஏடு படித்து வருகின்றனர்.
சைவம், தமிழை இரு கண்களாக பாவிக்கும் சிவமரபைச் சேர்ந்த நகரத்தார்கள். வைணவத்தையும் போற்றுவதன் அடையாளமாக ஆண்டு தோறும் புரட்டாசியில் வீடுகளில் ராமனின் வரலாற்றை பல நுாறு ஆண்டுகளாக ஏடு எடுத்து படித்து வருகின்றனர். அத்தகைய குடும்பங்களில் ஒன்று நெற்குப்பை இரணிகோயில் ந.பழ.,குடும்பம். இக்குடும்பம் 1941 முதல் 1944 வரை தற்போதுள்ள இரணியூர் ஆண்டகொண்டநாதர் சிவபுரந்தேவி கோயிலில் கட்டியது.
ஹிந்து அறநிலையத்துறை 1945 முதல் இரணியூர் கோயிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பங்களில் ஒன்றாக அறிவித்து பெருமை செய்தது. இக்குடும்பத்தின் ந.பழ., நல்ல கருப்பன் மற்றும் ந.பழ.,முத்துபழனியப்பன் சகோதரர்கள் கொழும்புவில் வணிகம் செய்தனர். அப்போது நல்லகருப்பன் செட்டியாருக்கு வைசூரி அம்மை பாதித்ததில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. அக்குறை நீங்க வேண்டி ராமாயண ஏடு எழுதி படிப்பதாக பிரார்த்தனை செய்ததில், பார்வை குறைபாடு சரியானது. இதனால் ராமாயண ஏட்டை 1850 ம் ஆண்டு பனை ஓலைகளில் எழுதி அந்த ஆண்டு முதல் கடந்த 175 ஆண்டுகளாக இக்குடும்பத்தினர் (ஆறாம் தலைமுறையினர்) இடைவெளியின்றி தொடர்ந்து படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை ‛ஏடு படித்தல் துவங்கி அடுத்த சனிக்கிழமை பூர்த்தி செய்யப்படும். பனை ஓலை ஏட்டை பத்திரமாக கையாண்டு அப்போதைய தமிழ் எழுத்தை படிப்பது எளிதாக இல்லாததால் 1980 ல் ஏட்டில் உள்ளபடி கைப்பிரதி புத்தகமாக எழுதி படித்து வருகின்றனர். மு.மாணிக்கம் தான் ஏட்டில் இருந்து கையெழுத்து பிரதியை தயாரித்தார். இந்த ஏட்டை ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் படிக்கும் போது குடும்பத்தில் குதுாகலம் தொற்றிடும் என நெற்குப்பை ந.பழ.மு., இல்லத்தைச் சேர்ந்த மா.ராமரத்தினம் தெரிவித்தார்.