பதிவு செய்த நாள்
07
பிப்
2013
04:02
உத்தானபாத மன்னனுக்கு சுமதி, சுருசி என்ற மனைவிகள். முதல் மனைவி. சுமதிக்கு துருவன் என்ற மகன் இருந்தான். சுருசிக்கும் ஒரே பிள்ளை. அவன் பெயர் உத்தமன். உத்தானபாதனுக்கு சுமதியை விட சுருசி மீது ஆசை அதிகம். இளையவள் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொள்வான். கணவர் தன்னை அலட்சியம் செய்வதை எண்ணி, சுமதி மனம் வருந்துவாள். இருந்தாலும் மகனுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள். ஒருநாள் சுருசி உத்தான பாதனிடம், நம் பிள்ளை உத்தமன் தான் இந்த நாட்டை ஆளவேண்டும். அவனுக்கு பட்டம் சூட்டவேண்டும், என்று கேட்டாள். சற்று யோசித்தாலும், அவனால் அவளின் பேச்சை மறுக்க முடியவில்லை. ஒப்புதல் கொடுத்து விட்டான். என்ன தான் ஒப்புதல் தந்தாலும், நாளை ஒரு காலத்தில் மூத்தாள் மகன் அரசுரிமைகோரினால் என்னாவது என்று சுருசிக்கு பயம் இருந்தது. மேலும், கணவரிடம் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில், சுமதி மீது இல்லாத அவதூறுகளை எல்லாம் கிளப்பி விட்டாள். அதை உண்மை என்று நம்பிய மன்னன், சுமதிக்கு தனியாக ஒரு வீடு கொடுத்து வெளியேற்றி விட்டான். ஒன்றுமறியாத துருவனை அழைத்துக் கொண்டு சுமதி அதில் குடியேறினாள். மகனுக்கு ஐந்து வயதானதும் விபரம் தெரிய ஆரம்பித்தது. ஒருநாள் தாயிடம், அம்மா! என் அப்பா யார்? அவரை நான் பார்க்கணும் என்று கேட்டான். குழந்தையின் பிஞ்சு மொழி கேட்ட அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. இருந்தாலும் அதை மறைத்தபடியே ஒரு பணியாளுடன் துருவனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தாள். மகிழ்ச்சியில் துருவன் உள்ளே சென்றான்.
துருவனின் வருகையைச் சற்றும் எதிர்பாராத தந்தை உத்தானபாதனும், பாசத்துடன் கட்டி அணைத்துக் கொண்டான். தன் மடியில் அமர்த்தி முத்தமிட்டான். அதைக் கண்ட சுருசிக்கு கோபம் தலைக்கேறியது. இந்த அசட்டுப் பையனை ஏன் மடியில் அமர்த்திக் கொண்டீர்கள்? கொடுத்த வாக்குறுதி காற்றில் போய்விட்டதோ? என்று வெடித்தாள். பணியாட்களை பார்த்து, யாரங்கே! உடனே இங்கிருந்து இவனை விரட்டி அடியுங்கள், என்று கத்தினாள். இத்தனை நடந்தும் உத்தானபாதன் மூச்சு விட வில்லை. துருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அழுதபடியே வெளியேறினான். சோக மயமாக பிள்ளை வீடு திரும்பியதைக் கண்ட சுமதிக்கு மனம் பொறுக்கவில்லை. பெற்ற வயிறு எரிந்தது. அவளால் இப்போது கண்ணீரை மறைக்க முடியவில்லை. அம்மாவின் நிலை கண்ட துருவனின் மனம் மேலும் புண்ணானது. நாட்கள் நகர்ந்தன. அம்மா! நான் கேட்டா கோபிக்காதே! அப்பாவை விடப் பெரியவர் உலகில் வேறு யாருமில்லையா? என்றான். மகனை அணைத்தபடி, ஏன் இல்லை? உலகில் உள்ள உயிர்களுக் கெல்லாம் அப்பா ஒருவர் இருக்கிறார். அவர் தான் கடவுள், என்றாள் அமைதியாக. மேலும் அவனிடம், இதோ பார்! அந்தக் கடவுளை யாரும் நேரில் கண்டதில்லை. ஆனாலும், அவரே உலகில் பெரியவர். அவரைத் தரிசித்தால் நம் துன்பம் நொடிப்பொழுதில் காணாமல் போய்விடும்!, என்றாள். அம்மாவின் பேச்சு பசுமரத்தாணிபோல துருவன் மனதில் பதிந்தது. கடவுளை எப்படியும் சந்திப்பது என்ற முடிவு செய்துவிட்டான். தாயிடம் கூட சொல்லாமல் கடவுளைக் காண அன்றிரவே வெளியே புறப்பட்டான். வெகுதூரம் வந்து விட்டான்.
பசித்த நேரத்தில், யாராவது இரக்கப்பட்ட மனிதர்கள் கொடுத்த உணவை வாங்கிச் சாப்பிட்டான். இரவில் எங்காவது மரத்தடியில் தூங்குவான். காலையில் எழுந்து மீண்டும் நடைப் பயணம். இப்படியே நாட்கள் சென்றது. காடுமேடெல்லாம் கடவுளைத் தேடி இஷ்டம் போல் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது ஆழ்மனதில் நிச்சயம் கடவுளை ஒருநாள் தரிசித்து விடலாம் என்ற எண்ணம் மட்டும் உறுதியாகிக் கொண்டே போனது. ஒருநாள் விசித்திரமான எண்ணம் தோன்றியது. ஓரிடத்தில் அமர்ந்தான். நான் தான் கடவுள்! என்று கடவுளே நேரில் வந்து தன்னிடம் தெரிவிக்கும்வரை இந்த இடத்தை விட்டு நகர்வது இல்லை என்று முடிவெடுத்தான். அந்த வழியில் செல்லும் வழிப் போக்கர்கள் அவனுடைய முகப் பொலிவு கண்டு, இந்தச் சிறுவன் பால யோகியாக காட்சியளிக்கிறான், என்று உணவும் நீரும் தந்தனர். காலப்போக்கில் யார் வந்து எழுப்பினாலும் எழ மறுத்தான். அவனது தியானம் தவமாக மாறியது. ஆண்டுகள் பல உருண்டோடியது. ஊணில்லை, உறக்கமில்லை. அவனது தவக்கனல் மேலுலகை அடைந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், அவன் முன் வந்து நின்றும் அவன் அசையவில்லை. நான் தான் கடவுள் என்று கடவுளே பேசும்வரை கண்களைத் திறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். ஒருநாள் கடவுளே ஒரு மனிதனைப் போல வந்து, துருவா! நான் தான் கடவுள் வந்திருக்கிறேன்!, என்றார். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கடவுளைக் காண ஆவலோடு கண்களைத் திறந்தான். எதிரில் சாதாரண மனித வடிவில் கடவுள் நின்றார்.
துருவா! சாதாரண மனிதனும் கடவுளே. ஒவ்வொரு உயிர்களிடமும் கடவுள் இருக்கிறார். உழைத்துப் பாடுபடுபவர்களின் வியர்வையிலும் அவர் நிறைந்து இருக்கிறார். உனக்குள்ளும் அவர் ஒளிந்திருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் தமது செயலால் கடவுளாக முடியும், என்று உபதேசித்தார். உண்மையை உணர்ந்த, துருவன் தவத்தை முடித்து எழுந்தான். ஏழை எளிய மக்களை நேசித்தான். அவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொண்டான். அவர்களின் சிரிப்பில் இறைவனைப் பார்த்தான். மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவனாக மாறினான். நாடெங்கும் துருவனின் புகழ் பரவியது. இந்நிலையில் மன்னர் உத்தானபாதனுக்கு வயதாகி விட்டது. நாட்டை நிர்வகிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். தன் இரண்டாம் மனைவியின் பிள்ளையான சுருசியின் பிள்ளை உத்தமனுக்குப் பட்டம் கட்ட முடிவெடுத்தான். நாடு முழுவதும் முரசறைந்து இந்த செய்தியைத் தெரிவிக்க உத்தரவிட்டான். ஆனால், மக்கள் உத்தமனை அரசனாக ஏற்க மறுத்து விட்டனர். மக்கள் நலனையே உயிராகக் கொண்டு செயலாற்றும் துருவனை மன்னராக்க வேண்டும் என்று எண்ணினர். நல்லாட்சி தரும் நல்லவரையே புதிய மன்னராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அறைகூவல் நாடு முழுக்க எழுந்தது. இதையடுத்து, துருவனுக்கும் உத்தமனுக்கும் இடையே போட்டி நடந்தது. அதில் வெற்றிபெற்ற துருவன் நாட்டின் புதிய அரசனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். சுமதியும் ராஜமாதாவாக அரண்மனை வந்தாள். தன்னை வஞ்சித்தாலும், சிற்றன்னை சுருசி, தம்பி உத்தமன், தந்தை உத்தானபாதன் ஆகியோரிடமும் துருவன் அன்பு காட்டத் தவறவில்லை.