சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். அவரது சீடர்களில் ஒருவன் உபகோசலன். ஒரு சமவர்த்த தினத்தன்று ஜாபாலர் தனது சீடர்களின் தகுதிக்கேற்ப ஞானோபதேசம் செய்து விடை கொடுத்தார். ஆனால், உபகோசலனை மட்டும் அழைக்கவில்லை. நண்பர்களைப் பிரிந்து தனியே இருந்த உபகோசலன் நான் என்ன தவறு செய்தேன்? குரு - குருமாதா இருவரும் முகம் கோணாதவாறுதானே நடந்து கொண்டிருக்கிறேன்! குருதேவர் கூட பலமுறை பாராட்டியிருக்கிறாரே என்றெல்லாம் குழம்பிக்கொண்டே அக்னி குண்டங்களுக்கு அருகே படுத்துறங்கி விட்டான்.
குரு பத்தினி கணவரிடம், உபகோசலனுக்கு ஏன் ஞானோபதேசம் செய்யவில்லை? அவனிடம் ஏன் இந்த பாரபட்சம்? அவன் ஞாபக சக்தியும், புத்திசாலித்தனமும், பணிவும் கொண்ட மாணவனாகத்தானே இருக்கிறான்? உங்களது ஐந்து வகை அக்னி குண்டங்களையும், அக்கறையாகத்தானே பேணிக் காக்கிறான். பூஜை, அபிஷேகம், ஹோமங்களுக்கு உங்களுக்கு எத்தனை உறுதுணையாக இருக்கிறான்? அவனுக்கு ஏன் கல்வி பூர்த்தியாகவில்லை? அவனுக்கு வீடு திரும்ப ஆசை இருக்காதா? என்று கேட்டாள். ஜாபாலர் பதிலேதும் கூறாமல் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். குரு பத்தினி மறுநாள் முதல் பல விதங்களிலும் உபகோசலனிடம் அன்பாய் இருந்தாள். குருதேவர், புது மாணவர்கள் வருமுன் க்ஷேத்திராடனம் போய் வருகிறேன் என்று புறப்பட்டார். உபகோசலனிடம் எதுவும் பேசவில்லை. தினமும் அக்னி தேவனை வழிபட்டு அக்னி அணையாமல் பார்த்துக் கொண்டான் உபகோசலன்.
அக்னி தேவதைகள் ஐந்து அக்னி குண்டங்களிலிருந்தும் ஒவ்வொருவராய் வெளிவந்து உபகோசலனுக்கு பிரம்மஞானத்தை உபதேசித்தனர். பிறகு, குழந்தாய்! தத்துவ ஞானத்தை நாங்கள் போதித்து விட்டோம். பிரம்ம வித்தையை உன் குருதேவர் மூலம்தான் பெற வேண்டும் அவரது அருளால் நீ சிறந்த பிரம்மா ஞானியாகத் திகழ்வாய் என ஆசீர்வதித்தனர். உபகோசலனின் மகிழ்ச்சி சொல்லி முடியாது. சில நாட்களுக்குப் பிறகு திரும்பிய குருநாதர், உபகோசலா! எனக்கு அக்னி தேவதைகள் தான் தத்துவ ஞானத்தை உபதேசித்தனர். நீயும் அந்த பாக்கியம் பெறவே உன்னை நிறுத்தி வைத்தேன். நீ எல்லோரிலும் சிறந்தவன் எனக்கூறி பிரம்ம வித்தையை உபதேசித்தார். பிறகு, முறையாக அவனுக்கும் சமவர்த்த விழா நடத்தி விடைகொடுத்த பிறகே புதிய மாணவர்களை ஏற்றார்.
போகும்போது அவனிடம், யார் ஜாதகத்தில் ஆயுள் குறைந்து காணப்பட்டாலும் அவருக்குக் குறிக்கப்பட்ட கெடுவன்று தங்க நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள், நாணயங்களைக் கொண்டு சிறு குன்று போல் அமைத்து, அந்த நபர் இருக்கும் அறையிலும், குன்றின் மீதும் நிறைய அகல விளக்குகளை ஏற்றி, அணையாமல் காத்து விடிய விடிய எந்த தெய்வத்தால் அல்லது கிரஹத்தால் ஹானி ஏற்படுமென்று நினைக்கிறாயோ, ஜாதகம் குறிப்பிட்டுக் காட்டுகிறதோ அந்தக் கடவுளைக் குறித்து மந்திரமோ, பஜனையோ இடைவிடாமல் நடத்து. யமன் அண்ட மாட்டான் என்று சில ரகசியங்களையும் சொல்லி அனுப்பினார். இதனால் குரு கூறியபடி செய்து உபகோசலன் அழியாப்புகழை அடைந்தான்.