பதிவு செய்த நாள்
12
அக்
2026
12:10
வானுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் குளம் துார்வாரப்படாமல் புதர் மண்டி கிடப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
வானுார் அடுத்த திருவக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் மற்றும் சந்திர மவுலீஸ்வரர் தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன.
இங்கு, பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இது மட்டுமின்றி செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலங்களில் ஏராளமானோர் அம்மனை தரிசித்து வருகின்றனர்.
உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்லும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கோவில் பக்கவாட்டில் குளம் அமைந்துள்ளது.
இந்த கோவில் குளத்தில் கடந்த ஆட்சியின் போது, ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில், முகப்பு பகுதியில் மட்டும், 60 அடி துாரத்திற்கும், 10 அடி அகலத்திற்கும் சிமென்ட் தரைகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதோடு, 20க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, இரும்பு வேலி அமைத்து அதிகாரிகள் கணக்கு காட்டி விட்டனர்.
ஆனால் கோவில் குளத்தை சுற்றியுள்ள படர்ந்து கிடக்கும் செடி, கொடிகளை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதர் மண்டி கிடக்கும் அந்த கோவில் குளத்தை நிர்வாகத்தினர் பூட்டி வைத்துக்கொண்டுள்ளனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரியிடம் கேட்ட போது, ‘குளத்தை துார்வாருவதற்கு, துறை மேல் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். தற்காலிகமாக முகப்பு பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்திருப்பதால், பாதுகாக்கவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி விடுவதால் பூட்டியும் வைக்கப்பட்டுள்ளது, ’ என்றார்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘கோவில் குளம் முறையாக பராமரிக்காததால், பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குளத்தை சுற்றி காடு போல் செடி கொடிகள் வளர்ந்து உள்ளது. தண்ணீரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சுவாமி வழிபாட்டுக்கு முன்பு நீராடுவதற்கும், கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.