பதிவு செய்த நாள்
11
பிப்
2013
11:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கையிலிருந்து தினம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, கொடிக்கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அங்குள்ள தண்ணீர் சுகாதார சீர்கேடு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க கட்டாய வசூல் நடக்கிறது. இதனால் கோயில் வாசல்படிக்கட்டுகளில், காலணிகளை விட்டுச் செல்கின்றனர். கோயிலுக்குள் பிரசாதங்களில் விலை இரண்டு மடங்காக விற்கப்படுகிறது. சனீஸ்வர பகவான் சன்னதியில், எள் விளக்குகளுக்கு ரூ.30 வசூலிக்கின்றனர். கோயிலின் அனைத்து மண்டபங்களிலும் மேல் பகுதியில் ஒட்டடை படிந்துள்ளது. கோயில் மூலஸ்தானத்தில், சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளை இலவச தரிசனத்திற்கு செல்வோர் தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப, அருகிலுள்ள கண்மாய்க்குள் ஆழ்குழாய் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மலைமேல் உள்ள காசி விஸ்வநாதரை தரிசக்கி முடியாமல் பக்தர்கள் செல்கின்றனர். அங்கு ரோப் கார் அமைக்க பல ஆண்டுகளுக்கு முன் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மலைக்குப்பின்புறம் தென்பரங்குன்றத்தில் 300க்கும் மேற்பட்ட மயில்களும், அவற்றில் மூன்று வெள்ளை மயில்களை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்குள் லட்சுமி தீர்த்தம் மோசமாக உள்ளது. வைரத் தேரை சீரமைக்க நடவடிக்கை தேவை. கோயில் யானை அவ்வை இறந்து பல மாதங்களாகிறது. யானையின்றியே திருவிழாக்கள் நடக்கிறது. விரைவில் யானை வாங்க ஏற்பாடு செய்ய, புதிய நிர்வாக அதிகாரி பச்சையப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.