புதுடெல்லி: இந்தியாவின் தொன்மையான அறிவு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், மகாபாரதம், கல்ஹணர் எழுதிய 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜதரங்கிணி, கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் ஆகிய மூன்று முக்கிய நூல்களின் கையெழுத்துப் பிரதிகளும் யுனெஸ்கோவின் ஆசியா–பசிபிக் பிராந்திய ‘உலக நினைவகப் பதிவேட்டில்’ (Memory of the World Register) இடம்பெற்றுள்ளன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 11-வது அமர்வில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த மூன்று நூல்களுக்கான பரிந்துரை ஆவணங்களைத் தயாரிப்பதில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) முக்கியப் பங்காற்றியது. இந்த அங்கீகாரத்தின் மூலம் இந்தியாவின் வரலாறு, இலக்கியம், தத்துவம் மற்றும் அரசியல் சிந்தனைகளுக்கு சர்வதேச அளவில் கூடுதல் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதையடுத்து, யுனெஸ்கோவின் ஆசியா–பசிபிக் உலக நினைவகப் பதிவேட்டில் இந்தியாவின் பதிவுகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் தொன்மையான அறிவுப் பொக்கிஷங்களுக்கு உலக அரங்கில் கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.