பதிவு செய்த நாள்
12
பிப்
2013
11:02
ஓட்டப்பிடாரம்: புளியம் பட்டி புனித அந்தோணியார் ஆலயத் தில் இன்று திருவிழா கோலாகலமாக நடக்கிறது. புளியம்பட்டி புனித அந்தோணி யார் புதுமை புனிதரின் புகழுக்கு கம்பீரமாக நிற்கும் ஆலயம் புளியம் பட்டி ஆலயம் ஆகும். கி.பி.17ம் நூற்றாண்டின் மத்தியகாலத்தில் பொத்தகாலன்விளையைச் சார்ந்த மரிய அந்தோணி தொம்மை என்பவர் புளியம்பட்டி வந்து தங்கியுள்ளார். இவர் ஒரு தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவர். திருப்பலிக்கும், ஜெபிப்பதற்கும் சந்தைப் பேட்டை தூய சவேரியார் ஆலயத்திற்கு தவறாமல் செல்வது வழக்கம். இவரது 12 பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகள் மட்டுமே பிழைத்தன. அதிலும் தனது கடைசி மகன் அம்மை நோயினால் தாக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருந்தபோது தூய அந்தோணியாரிடம் உருக்கமாக மன்றாடினார். புனிதர் இவரது கனவில் தோன்றி பிள்ளை பிழைக்க குடும்பம் தழைக்க ஆலயம் கட்டி வழிபடு என்று சொன்னதாக மரபு. அதன்படி மணியாச்சி ஜமீன்தாரின் உதவி பெற்று ஒரு சிறிய ஓலைக்குடிசை ஆலயம் ஒன்றுகட்டி அதில் சந்தைப்பேட்டை தூய சவேரியார் கோவிலில் இருந்த இப்போது ஆலயத்தில் வீற்றிருக்கும் புனிதரின் புதுமை சொருபத்தை கொண்டு வந்து வைத்து வழிபடலானார். சிறிது நாளில் நோய்வாய்ப்பட்ட அவரது மகன் குணம்பெற்றான். அன்று துவங்கிய பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி இன்றுவரை புனிதர்... கேட்கும் வரம் தந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்று இருக்கும் இந்த பிரமாண்டமான ஆலயத்தை அருள்பணி அருளானந்தம் சே.ச.அவர்கள் கட்டினார்கள். இந்த ஆலயத்தை மதுரை பேராயர் மேதகு பீட்டர் லெயோனார்டு அவர்கள் 13.06.1961ல் அர்ச்சித்தார்கள்.
கொடிமரம்: இந்த கொடிமரமும் ஒரு புதுமையின் சாட்சியே. காணாமல் போன தோணி கிடைக்க பக்தர் ஒருவர் தூய அந்தோணியாரை வேண்டி இந்த கொடிமரத்தை காணிக்கையாக்கினார்.சில நாட்களிலேயே தொலைந்த அவரது தோணி கிடைத்தது. இன்றும் புனிதரின் அருள் வேண்டி எண்ணற்ற பக்தர்கள் இக்கொடிக் கம்பத்தை சுற்றிவருவதும், பல்வேறு பக்தி முயற்சிகளை செய்வதும் கண்கூடான காட்சி.
திருத்தலத்தில் அறப்பணிகள்: தூய அந்தோணியார் பெயரில் இத்திருத்தலத்தில் பல சமூகப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அறப்பணிகள் பக்தர்களின் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை வைத்தே செய்யப்படுகின்றது என்பது தூய அந்தோணியாரின் பக்தர்களுக்கு பெருமையாகும். பதுவா முதியோர் இல்லத்தை பாளையங்கோட்டை மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு இருதயராஜ் அவர்கள் தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் முதியோர் ஆண்டான 1999ல் ஜூன் 13ல் அர்ச்சித்து திறந்து வைத்தார். தூய அந்தோணியார் கருணை இல்லம் 1963ஆம் ஆண்டு அருள்பணி அருளானந்தம் தூய அந்தோணியார் சிறார் காப்பகம் ஒன்றை உருவாக்கினார். தொடக்க கல்விக்கு மேல் கல்வியை தொடர இயலாத மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து கல்வி பயில இந்த காப்பகம் வாய்ப்பு தருகின்றது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் மாணாக்கர்களுக்கு கல்விவாய்ப்பு தரப்படுகின்றது. தாசில்தார் சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என்ற நிபந்தனை தவிர இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திருத்தலமே செய்து தருகின்றது. கேட்ட வரம் தரும் கோடி அற்புதரை தரிசிக்க, மன்றாட வரும் பக்தர்கள் கூட்டம் எண்ணிலடங்காது. புனிதரின் முன் அமர்ந்து ஜெபிக்கும் பக்தர்களை எப்போதும் கோவிலில் காணலாம். பீடம் பழைய குடிசைக் கோவிலுக்காக அமைக்கப்பட்டது. இதனை பாளை ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்கள் அர்ச்சித்து நிறுவினார்.
புதுமை கிணறு: திருத்தலத்தில் மிக முக்கியமான இடங்களில் புதுமை கிணறும் ஒன்றாகும். பக்தர்கள் உடல், மனநோய் நீங்க இங்கு குளித்துவிட்டு ஆலயத்தை 13 முறை வலம் வந்து புதுமை சிருபத்தை வணங்குவதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.
திருத்தல ஆண்டுப் பெருவிழா: ஒவ்வொரு ஆண்டும் தை திங்கள் கடைசி செவ்வாய் அன்று திருத்தல ஆண்டுப் பெருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். முன்னதாக 13 நாட்களிலும் புனிதரின் நவநாட்களாக சிறப்பிக்கப்படும். நற்கருணை பவனியும், புனிதரின் திருவுருவப் பவனியும் திருவிழாவின் சிறப்பு நிகழ்வுகளாகும். இந்த புகழ்பெற்ற ஆலய திருவிழா ஜனவரி 31ம் தேதி கொடி யேற்றத் துடன் கோலாகலமாக துவங்கியது. திரு விழா வில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப் பலி, ஜெப வழிபாடு நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4.30 ,6.00, காலை 7.30 ஆகிய நேரங்களில் திருப்பலி நடக்கிறது. காலை 10 மணிக்கு குண மளிக் கும் வழிபாடும், அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பெருவிழாத் திருப்பலி பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப் பலி நடக்கிறது. இன்று நடக்கும் விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் புளியம் பட்டியில் குவிந்துள்ளனர். நாளை காலை 6 மணிக்கு புனிதரின் திருக்கொடி இறக்கப்படுவதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை குழந்தைராஜ், அருட்பணியாளர்கள் ஜெகன்ராஜா, பெர்க்மான்ஸ், மற்றும் திருத்தல அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பக்தர்கள் செய்துள்ளனர்.