முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும், கந்த சஷ்டி விழா கோலகாலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு, கந்த சஷ்டி விழா, நவ., 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜைகள், அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நாளை அடிவாரத்தில் இருந்து மலைமேல் செல்ல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. அடிவாரத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில், பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, கோயில் பஸ் மூலமும், படிக்கட்டு பாதை மூலமும், மலைமேல் உள்ள கோயிலுக்கு செல்ல வேண்டும். இன்று, 340க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.