திருமலை: திருமலை ஸ்ரீவாரி கோயிலில் நடைபெற உள்ள புஷ்பயாகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை பிரம்மாண்ட மலர் ஊர்வலம் நடைபெற்றது. கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் இவ்வழிபாடு நடத்தப்படுகிறது. திருமலை கல்யாண வேதிகை அருகேயுள்ள தேவஸ்தான மலர்த் தோட்டத்தில் மலர்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் மலையப்ப சுவாமி கோயிலுக்கு மலர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் கூறுகையில், பிரம்மோற்சவத்தின்போது அறியாமல் ஏற்பட்ட குறைபாடுகள், தவறுகளுக்குப் பரிகாரமாகவும், உலக நலன் வேண்டியும் புஷ்பயாகம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். 15-ம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்த இவ்வழிபாடு, இடையில் நிறுத்தப்பட்டு, 1980-ம் ஆண்டு தேவஸ்தானத்தால் மீண்டும் தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாகம் நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் 16 வகையான மலர்கள், 6 வகையான புனித இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மொத்தம் 9 டன் மலர்களில் தமிழகத்திலிருந்து 5 டன், கர்நாடகத்திலிருந்து 2 டன், ஆந்திராவிலிருந்து 2 டன் மலர்கள் வந்துள்ளன.