சென்னை, திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் காமராஜர் நகரில் அமைந்துள்ள வட திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோவிலில் இன்று முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவிலில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. முதலில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு புனிதப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மங்கள இசை முழங்க திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. முதலில் முருகப்பெருமானுக்கு புதிய வஸ்திரம் சாத்தப்பட்டு, காப்பு கட்டி, பூணூல் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருமாங்கலியத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கலியம் அணிவிக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா..." என விண்ணதிர முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். சென்னையிலேயே திருச்செந்தூர் முருகனை தரிசித்த உணர்வை ஏற்படுத்திய இந்தத் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாகக் கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி, ஆன்மிகம், மங்கள இசை என விழாக்கோலம் பூண்ட வட திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோவில், திருக்கல்யாண வைபவத்தால் களைகட்டியது.