பதிவு செய்த நாள்
24
நவ
2026
10:11
கர்நாடகாவில் பல இடங்களில், குகைக் கோவில்கள் உள்ளன. மங்களூரு அருகில் உள்ள சோம நாதேஸ்வரர் குகைக் கோவில், மிகவும் அற்புதமானது. இங்கு புனித நீராடுவது, மிகவும் சிறப்பானது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகில் நெல்லி தீர்த்த சோம நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இக்கோவில் 1487ம் ஆண்டில் கட்டப்பட்டதாக, கல்வெட்டு ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கும் முன்பே, கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இயற்கையின் மடியில் இந்த குகைக் கோவில் அமைந்திருப்பது, இதன் மற்றொரு சிறப்பாகும். இந்த குகை இயற்கையாக உருவானதாம். குகையில் நுழைந்து 200 மீட்டர் நடந்தால், தீர்த்த குளம் மற்றும் சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.
குகையின் மேற்பகுதியில் இருந்து, சொட்டு சொட்டாக நீர்த்துளிகள் விழுந்தபடி இருப்பது, பெரும் அதிசயம். இந்த நீர்த்துளிகள் நெல்லிக்கனி வடிவத்தில் தென்படுகின்றன.
இதே காரணத்தால் இந்த குளத்துக்கு, நெல்லி தீர்த்தம் என்ற பெயர் வந்தது. இங்கு குடிகொண்டுள்ள சிவனை, ஜாபாலேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். இந்த குகையில் ஜாபாலி மகரிஷி தவம் செய்ததாக நம்பப்படுகிறது.
பக்தர்கள் குகைக்குள் நுழைவதற்கு முன், வெளிப்பகுதியில் உள்ள நாகப்பா ஏரியில் நீராடுகின்றனர். அதன்பின் ஈர உடையில் குகைக்குள் சென்று, புனிதமான நெல்லி குளத்தில் நீராடி, சிவலிங்கத்துக்கு ஜலாபிஷேகம் செய்கின்றனர். இப்படி செய்தால் பாவம் நிவர்த்தியாகும். மனதுக்கு அமைதி கிடைக்கும். நோய்கள் விலகி ஆரோக்கியம் பிறக்கும் என்பது ஐதீகம்.
ஆண்டின் அனைத்து நாட்களிலும், குகைக்குள் செல்ல அனுமதி இல்லை. அக்டோபர் 17 முதல் ஏப்ரல் 14 வரை மட்டும், குகைக்குள் சென்று நெல்லி குளத்தில் நீராடலாம். மற்ற நாட்களில் அனுமதி இல்லை. 2027 ஏப்ரல் 14 வரை, தினமும் காலை 7:30 மணி முதல், மதியம் 1:00 மணி வரை குகைக்குள் செல்ல வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
பசுமையான வனப்பகுதியில், இயற்கை சூழ்ந்துள்ள அமைதியான இடத்தில், நெல்லி தீர்த்த சோம நாதேஸ்வரர் குடிகொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சென்றால் மனதுக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.