எங்கள் ஊரில் மழையே இல்லை,... இப்படி ஒரு சாரார். எங்கள் ஊரில் மழை கொட்டி வெள்ளக்காடு,... இப்படி மற்றொரு சாரார். இது என்ன! ஒன்று நல்லா பெய்யணும், இல்லாட்டி பெய்யாமலே இருந்துட்டு போகலாம்...இப்படி நல்லா இருக்கிற சாலையை சேறும் சகதியுமாக்கவா இந்த மழை பெய்கிறது.. இது இன்னொரு சாரார். ஆக, மழை மட்டும் யாருக்கும் எப்போதும் திருப்தி தருவதில்லை. ஆனால், திருப்தியாக மழை பொழிய வழியிருக்கிறது. இதற்கு திருப்பாவையில் நான்காவது பாட்டு வழி செய்கிறது. ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் என்ற பாடலில், மழைக்கடவுளுக்கு ஆண்டாள் வேண்டுகோள் வைக்கிறாள். நான் பெய் என்றால் பெய்ய வேண்டும், நில் என்றால் நிற்கவேண்டும். இப்படி அதிகாரத்தொனியில் மழைக்கடவுளுக்கு உத்தரவிட வேண்டுமானால், அந்தப் பெருமாளை துணைக்கொள்ள வேண்டும். அவரைச் சரணடைந்து எல்லாமே அவர் தான் என்ற நிலைக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டு விட்டால் இது சாத்தியம். வாழ உலகினில் பெய்திடாய் என்கிறாள் ஆண்டாள். நாங்கள் வாழ்வதற்காகத்தான் மழையே தவிர, உன் இஷ்டத்துக்குப் பெய்து எங்களைக் கஷ்டப்படுத்த அல்ல என்று உத்தரவு போடுகிறாள். எனவே, நம் ஊரில் தேவைக்கேற்ப மழை பெய்ய திருப்பாவையின் நான்காவது பாசுரத்தை கூட்டாகச் சேர்ந்து பாடுங்கள்.