பதிவு செய்த நாள்
27
நவ
2026
10:11
திருப்பரங்குன்றம்: ‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றத்தயார். எங்களுக்கும் ஆசை தான். அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’ என கோயில் முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் தெரிவித்த நிலையில், அரசுக்கு ஆதரவாக அவர் உட்பட 4 பட்டர்களிடம் நள்ளிரவில் அறங்காவலர்கள் கடிதம் எழுதி வாங்கினர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்துாணில் நவ. 24ல் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ‘அரசியல் காரணங்களுக்காக’ ஏற்றப்படவில்லை. வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறியதாக சர்ச்சை எழுந்த நிலையில் ஸ்தானிக பட்டர்களின் கருத்தை பெற்றும், அறங்காவலர்கள் குழு தீர்மானத்தின் அடிப்படையிலும் மகாதீபம் ஏற்றப்பட்டதாக கோயில் துணை கமிஷனர் செல்வி அறிக்கை வெளியிட்டார். இதை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றத்தில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா அறிக்கை சமர்ப்பித்தார்.
பட்டர்கள் எதிர்ப்பு: இந்நிலையில் ‘தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை’ என நவ.,25ல் கோயில் ஸ்தானிக பட்டர்கள் மறுப்பு தெரிவித்து கோயில் துணைகமிஷனருக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இது நீதிமன்றத்தில் அரசுக்கு எதிரான உத்தரவுக்கு வழிவகுக்கும் என்பதால், பட்டர்களை சமரசம் செய்யும் முயற்சியில் அறநிலையத்துறை அதிகாரிகளும், அறங்காவலர்களும் ஈடுபட்டனர். இதையறிந்து ஹிந்து அமைப்பினர் பட்டர் சுவாமிநாதனின் வீட்டின் முன் திரண்டதால் கைது செய்யப்பட்டனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு அறங்காவலரின் உதவியாளர் ஒருவர் மூலம் தாங்கள் விரும்பியபடி பட்டர்களிடம் கடிதம் எழுதி வாங்கினர்.
மிரட்டி எழுதி வாங்கவில்லை: நமது நிருபரிடம் சுவாமிநாதன் பட்டர் கூறியதாவது: எங்கள் கருத்துக்களின் அடிப்படையில் மகா தீபம் ஏற்றியதாக அறிக்கை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் துணை கமிஷனரிடம்தான் கடிதம் கொடுத்தோம். அது எப்படி வெளியானது என்று தெரியவில்லை. கார்த்திகைக்கு மறுநாள் நவ. 25ல் கோயில் நிர்வாகம் சார்பில் எங்களிடம் (ஆதரவு) கடிதம் கேட்டார்கள். ‘முறைப்படி கடிதமாக கேளுங்கள்’ என்றோம். அதனடிப்படையில் கடிதம் கொடுத்தனர். நாங்கள் எங்களது கருத்துக்களை பதில் கடிதமாக கொடுத்துள்ளோம். கோயில் நிர்வாகம் என்னை மிரட்டி கடிதம் வாங்கவில்லை. எங்களுக்கு ஒரு ஆதாரம் வேண்டும் என்பதற்காகத்தான் கோயில் நிர்வாகத்திடம் கடிதமாக கொடுங்கள் என கேட்டோம். இவ்வாறு கூறினார்.
கடிதத்தில் இருப்பது என்ன: அறங்காவலர் குழுத்தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் அறங்காவலர்களுக்கு கோயிலின் நான்கு ஸ்தானிக பட்டர்கள் அனுப்பியுள்ள கடிதத்தின் விபரம்: நாங்கள் காலம் காலமாக கோயில் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து அனைத்து விதமான திருவிழாக்களையும் நடத்தி வருகிறோம். இந்த கார்த்திகை தீபத்திருவிழாவும் 1996ம் ஆண்டு முதல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தான் செய்து வருகிறோம். கோயிலின் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில், ராஜகோபுரம் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை ஏற்றும் இடம் ஆகியன யாவும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம், சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மூலஸ்தான கருவறைக்கு நேர் மேல் சுவாமியின் சிரசின் மேல் உள்ளதற்கு சமமாகும். மேலும் கார்த்திகை தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் தீப மண்டபம் உள்ள குன்று, கோயிலின் மூலஸ்தான விக்ரகங்கள் பஞ்சமூர்த்தி சிலைகள் அமைந்துள்ள குடைவரை மேல் உள்ளது. 1996ம் ஆண்டு முதல் கோயிலின் வழிகாட்டுதல் படியும் சைவ சமய நெறி முறைகளின்படியும் இந்த மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றி வருகிறோம்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு கோயிலில் தீபம் ஏற்றும் வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நவ.,24 அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம் எனவும், ஏற்கனவே இதுபோன்று எழுத்துப்பூர்வமான கருத்துரையை 07.11.2013, 04.12.20, 25.12. 2025ம் தேதியும் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் எங்களின் கருத்துக்களை வாய்மொழியாகவோ தேவைப்பட்டால் எழுத்து மூலமாகவோ பெற்றுக் கொண்டு உச்சிப்பிள்ளையார் கோயில் தீபமண்டபத்தின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அவ்வாறு ஏற்றுவது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகளின் படியும் சைவ சமயம் சார்ந்த நெறிமுறைகளின் படியும் சரியானது. எங்களுடைய கருத்துக்களின் படியும் சைவ சமய வழிபாட்டு நெறிமுறைகளின் படியும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபம் மண்டபத்தில் தீபம் ஏற்றி வருகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு: கடித சர்ச்சை காரணமாக ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், பாலசுப்ரமணியன், சொக்கு சுப்பிரமணியன், சண்முகசுந்தரம் வீடுகளுக்கு ஹிந்து அமைப்பினர் வரவாய்ப்புள்ளதாக கருதி அவர்களின் வீடுகளுக்கும், அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகசுந்தரம் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற 20 ஆண்டுகளாக கேட்கிறோம்
பட்டர் சுவாமிநாதன் கூறியதாவது: 1996ம் ஆண்டு முதல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோயில் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 20 ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள தீபத்துாணிற்கு படிக்கட்டுகள் அமைத்து தரும்படி கோயில் நிர்வாகத்திடம் நாங்கள் கேட்டு வருகிறோம். தீபத்துாணிற்கு செல்ல படிக்கட்டு இல்லாத சூழலில் எப்படி மலை மேல் சென்று தீபம் ஏற்ற முடியும். படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தால் தீபம் ஏற்ற தயாராக உள்ளோம். தீபத்துாணை பாதுகாக்க நடவடிக்கை தேவை. இப்போதே தீபத்துாணில் இருந்து மணல் விழுகிறது. தீபத்துாணை பாதுகாக்கவில்லை என்றால் 10 ஆண்டுகளில் அந்த துாணே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் என்றார்.