திருப்போரூரில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் மேற்கு பகுதியில், 100 அடி உயரத்தில் உள்ள பிரணவ மலையில், பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. அகத்தியர், முருகப்பெருமானிடம் பிரணவத்தின் பொருள் கேட்க, பிரணவமே மலையாக காட்சியளித்தது என்றும், திருமாலும், மகாலட்சுமியும் இக்கோவிலில் வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், தினமும் காலை – மாலையில் பூஜை நடத்தப்படுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், படி உத்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், மலைக்கோவிலுக்கு செல்ல பாதை மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. முறையான தார்சாலையோ, கான்கிரீட் சாலையோ அமைக்கப்படவில்லை. மலைச்சரிவில் சாலை கரடு முரடாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், மலை ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, மலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.