கோவிலை விட்டு வெளியேறிய ஸ்வாமிக்கு மக்கள் பரிகார பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2013 10:02
ப.வேலூர்: ஸ்வாமி கோவிலை விட்டு வெளியேறியதாக கருதிய ப.வேலூர் வெட்டுக்காட்டுப்புதூர் கிராம மக்கள், நேற்று பரிகார பூஜை செய்து ஸ்வாமியை கோவிலுக்குள் அழைத்து வந்தனர். ப.வேலூர் அருகே வெட்டுக்காட்டுப் புதூர் அருந்ததியர் காலனியில் மதுரைவீரன் ஸ்வாமி கோவில் உள்ளது. அந்த கோவிலில் பெரியசாமி, கருப்பனார் ஸ்வாமி உள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், அருள் வந்தது போல் ஆடி வந்துள்ளனர். அவர்கள், கோவிலில் இருந்து ஸ்வாமி வெளியேறி கொல்லிமலை சென்றவிட்டதாக கூறி வந்துள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உரிய பரிகாரம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நேற்று கோவிலில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மக்கள் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தி ஸ்வாமியை கோவிலுக்குள் அழைத்து வந்தனர். மேலும், தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.