பதிவு செய்த நாள்
15
பிப்
2013
03:02
கார்த்திகை மாதம், ஒரு வாரமாக விடாமல் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றுக்கு தென்பக்கம் இருக்கும் சிறிய ஊரான திருக்கோயிலூரில் முகாமிட்டிருந்தார் கலெக்டர் ஐசக் ஐடன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வேலூர் கலெக்டராக இருந்தவர் ஐடன். மக்களை கொடுமைப்படுத்தி, சர்வாதிகாரத்தனத்துடன் நிர்வாகம் செய்து வந்த பல ஆங்கிலேய கலெக்டர்கள் இருந்த கால கட்டத்தில், கொஞ்சம் வித்தியாசமனாவர் ஐடன். வரி வசூல் போன்ற விஷயங்களில் ரொம்பவும் கண்டிப்பு காட்டாமல், மக்களின் சிரமங்களை புரிந்துநடந்து கொள்பவர். இதனால், அவருக்கு மக்களிடையே நல்ல பெயர் இருந்தது. தவிர, கோயில்லும் பெரும் ஆர்வம்கொண்டவர்.
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை ஓட்டி நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் அண்ணாமலையார் பவனி வரும் தேரை, வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைப்பதற்கு வேலூர் மாவட்டக் கலெக்டரைத் தான் அழைப்பார்கள். இந்தத் தேர்த்திருவிழாவில் மிகவும் ஈடுபாட்டுடன் தவறாமல் கலந்து கொள்வார் ஐடன். மறுநாள், தேர் ஓட்டத்தை கலெக்டர் தொடங்கி வைக்க வேண்டும் ஆனால் திருக்கோவிலூரில் மாட்டிக்கொண்டு விட்டார் கலெக்டர் ஆற்றைக் கடந்துதான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும்.
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் ஐடன். திடீரென்று என்ன தோன்றியதோ.... எழுந்து பங்காளாவின் வராண்டாவுக்கு வந்தார். அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த சிப்பாயிடம். குப்புசாமி முதலியை கூப்பிட்டு வா என்றார். முதலியார் அவரது முகாம் குமாஸ்தா. மழை தூறிக்கொண்டிருந்த நிலையில். சிப்பாய் அடுத்த கட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த குப்புசாமி முதலியாரை எழுப்ப ஓடினான். சிறிது நேரத்தில் தலையில் துண்டைப் போர்த்தியவாறே ஓடி வந்தார் முதலியார். ஐயா என்று கலெக்டர் முன் பணிந்து நின்றார். நாளைக் காலை ல வெள்ளம் வடியுதோ, இல்லையோ, குதிரையில் ஆற்றைக் கடந்து போகப் போகிறேன். என்றார் ஐடன். வேண்டாம் துரை ரொம்ப ஆபத்து என்றார் முதலியார். காலையில் கிள்பிப் போனாத்தான் தேர் ஓட்டத்தை தொடங்கி வைக்க சரியான நேரத்தில் போக முடியும். கவலைப்படவேணாம். ஈசான்ய ஞான தேசிகன் நமக்கு வழிகாட்டுவார் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற ஐடன் மனத்தில் முழுக்க நிரம்பியிருந்தார், ஞானதேசிகர். ஐடன் நினைவு திரையில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்த சம்பவங்கள் பளிச்சிட்டன.
இங்கிலாந்திலிருந்து வரும்போதே ஐடனுக்கு காசநோயின் அறிகுறி இருந்தது. வேலூரில் பதவியேற்றவுடன் ரொம்ப அதிகமாகப் போய்விட்டது. ஒருநாள் இரவு சளியுடன் ரத்தமும் வர இருமல் நிற்கவேயில்லை. சத்துவாச்சேரி மருத்துவருக்கு வைத்தியத்தை எப்படி தொடர்வது என்றே புரியவில்லை. அவர் கையைப் பிசைந்து நின்றுகொண்டிருந்தார். துறை தெய்வமாப் பார்த்து உங்க நோயைத் தீர்த்துவைக்கணும். திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே ஈசான்ய ஞானதேசிகர் என்ற மகான் இருக்கிறார். பல அற்புதங்களை நிகழ்த்தியவர் அவர். அவர் பார்வை பட்டாலே பல தீராத நோய்கள்கூட குணமான அதிசயம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த மகான் தியானத்தில் இருக்கும்போது யாரும் தொந்தரவு செய்யக்கூடாதென்று, அருணாச்சலேஸ்வரரே புலியாக மாறி தேசிகர் பக்கத்தில் இருப்பாராம். கண் முழித்ததும் தேசிகர் புலியை தடவிக்கொடுக்க, புலி காணாமல் போகுமாம். துரை, அந்த மகானை ஒரு முறை தரிசித்து ஆசிபெற்றால், நோய் குணமாக வாய்ப்பு இருக்கிறது என்றார் குப்புசாமி முதலியார். சரி. அதையும்தான் செய்துபார்த்துடலாம் மேன் என்றவாறு விடிந்ததும் திருவண்ணாமலைக்குக் கிளம்பிவிட்டார் ஐடன்.
திருவண்ணாமலையில் ஈசான்ய ஞானதேசிகர் மடம் பரபரப்பாக இருந்தது. ஞானதேசிகரின் சிஷ்யர்கள். கலெக்டர் வருகையை குறித்து ஆச்சர்யத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். மகான் ஞானதேசிகர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மடத்துக்கு வெளியே தன் காலணியை கழற்றிவிட்டு, உள்ளே போன ஐடன், தேசிகருக்கு முன்னால் மற்றவர்கள் செய்வதுபோல சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, எழுந்து நின்றார். அப்படியே சில மணித்துளிகள் நிற்க, ஞானதேசிகர் கண் விழித்தார். அருகில் கும்பத்தில் வைக்கப்பட்டிருந்த மாவிலைக் கொத்தை கலெக்டர் தலைக்கு மேல்கொண்டு போக, நீர்த்துளிகள் அவர் முகத் தில் பட்டு தெளித்தன. இதற்குள் குப்புசாமி முதலியார் மகானிடம் வந்த காரணத்தை விளக்க முற்பட, அவரை பேச வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினார் தேசிகர்.
போய் வரலாம் என்று கலெக்டரிடம் சைகையிலேயே சொன்னார். மகானை மீண்டும் நமஸ்ரித்து விடைபெற்றார் கலெக்டர். என்ன ஆச்சரியம்? அடுத்த இரண்டே மாதத்தில் காசநோய் கலெக்டரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டது. அப்போதிலிருந்து தேசிகரின் தீவிர பக்தனாகிவிட்டார் ஐடன். மாதம் ஒருமுறையாவது திருவண்ணாமலைக்குக் சென்று மகானை தரிசித்து வருவார். தனிப்பட்ட முறையில் தனக்கு வரும் கஷ்டங்கள் கூட, மகானை நினைத்துப் பிரார்த்திக்கையில், விலகி ஓடுவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வந்தார் ஐடன். மடத்துக்கு நிலம் கொடுக்க முன்வந்தார் ஐடன். இந்த பரதேசிக்கு எதற்கு நலம்? இரண்டு குழந்தைகள் வைச்சிருக்கானே அருணாச்சலம், அவனுக்கு கொடு நிலம் என்று சொல்லிவிட்டார் தேசிகர். இப்படி ஞானதேசிகரை மனத்தில் நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டார் கலெக்டர். மறுநாள் காலை குதிரையில் கிளம்பி ஆற்றங்கரைக்கு வந்தார். கலெக்டரின் உதவியாளர்கள் அவரை எப்படித் தடுப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். கலெக்டரோ ஞான தேசிகரை வணங்கி ப்ளீஸ் ஹெலப் மீ என்று மனதார வேண்டிக்கொண்டிருந்தார். ஆற்றில் வெள்ளம் வடிந்தபாடில்லை. திருவண்ணாமலையில் பக்தர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு. தேரோட்டத்தைத் தொடங்கி வைக்க கலெக்டர் வருவாரா? மாட்டாரா? என்று அவர்களிடயே பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. தேசிகர் மடத்திலோ, தேசிகர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சுற்றிலும் சிஷ்யர்கள்.
திருக்கோவிலூரில் ஞானதேசிகரை மனத்தில் வேண்டிக்கொண்டே ஐடன், குதிரை மேல் அமர்ந்து கம்பீரமாக ஆற்றில் இறங்கினார். அதேசமயம் திருவண்ணாமலையில் தியானத்திலிருந்து கண் விழித்தார் தேசிகர். கைகளை தென்புறமாக நீட்டி இடதுபுறம் தாழ்த்தினார். சிஷ்யர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டாலும் நாம் காப்பாற்ற வேண்டாமோ? என்று சொன்னார் தேசிகர். அங்கே ஆற்றில் இறங்கிய ஐடனுக்கு ஆச்சர்யம், திடீரென்று வெள்ளம் குறைந்துபோனது. குதிரை நன்கு நடந்துபோகக்கூடிய அளவு தண்ணீர் மட்டம் குறைந்துபோனது. கலெக்டர் பரிவாரங்கள் ஐடனைத் தொடர ஆற்றுக்கு மறுபக்கம் வந்த கலெக்டர், தனது பயணத்தை திருவண்ணாமலை நோக்கி விரைவுபடுத்தினார். கலெக்டரின் மனம் முழுக்க ஞானதேசிகர் நிறைந்திருந்தார். திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் தேர் கிளம்புவதற்கு தயாராக கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது.