பதிவு செய்த நாள்
18
பிப்
2013
11:02
விருத்தாசலம்: தினமலர் செய்தி எதிரொலி காரணமாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசு, ஆலங்கன்றுகள், செடி, கொடிகளை அழிக்க ரசாயன மருந்து தெளிக்கப்பட்டது. விருத்தாசலத்திலுள்ள பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் கோபுரங்கள், சுற்றுச் சுவர்கள், பிரகார சுவர்களில் அரசு, ஆலங்கன்றுகள், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கோபுரத்தில் வேர்கள் ஊடுருவி விரிசல்கள் ஏற்பட்டதுடன், அதிலுள்ள சிலைகளில் சில பழுதாகி, இடிந்து கீழே விழுந்தன. வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளால் கோபுரத்திற்கும், சுற்றுச் சுவர்களுக்கும் ஆபத்து ஏற்படுமென கடந்த 10ம் தேதி தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் கொண்ட சிவனடியார் குழுவினர், நேற்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து, கோபுரங்கள், சுற்றுச் சுவர்கள், பிரகார சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை, ரசாயன மருந்து தெளித்து அழிக்கும் பணியில் ஈடுபட் டனர். குழு ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், நாங்கள் பிரதி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உழவாரப்பணி செய்து வருகிறோம். இக்கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அழிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டது. அதைத் தொடர்ந்து விருத்தாசலம் வந்துள்ளோம். ரவுண்டப், அன்மோல், யுனிசால் ஆகிய நச்சு ரசாயன மருந்துகளை தண்ணீருடன் கலந்து செடி, கொடிகள் மீது, ஸ்பிரேயர் மூலம் தெளிக்கிறோம். மருந்தின் நச்சுத் தன்மை இலை மூலம் அடி வேர்கள் வரை பரவி செடிகளை அழித்து விடும். 30 நாட்களுக்குள் செடிகள் கருகி, தானாக விழுந்துவிடும் என்றார்.