திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழாவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குடவருவாயில் தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 23ம் தேதி காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி வீதி உலாவும், காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளிவீதி உலா நடக்கிறது. 24ம் தேதி சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 25ம் தேதி நடக்கிறது. 26ம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தை உட்பட திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.