பதிவு செய்த நாள்
21
பிப்
2013
11:02
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில் 27 -ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. நாட்டின் தென் எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் கடந்த 1998 -ம் ஆண்டு மே மாதம் 18 -ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு முடிவு செய்து சுமார் 1 கோடியே 10 லட்சம் ருபாய் செலவில் 25-க்கும் மேற்ப்பட்ட திருப்பணிகள் கோயில் நிதி மற்றும் உபயதார்கள் முலம் நடந்துவருகிறது. கோயிலில் வரும் 27-ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று கோலகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று (20ம் தேதி) காலை 4.30 மணிக்கு கணபதிஹோமம், மாலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு ஆச்சார்யா வர்ணம், பசுதானம், பஞ்சபுண்யாக சுத்தி, அங்குரா ரோபணம், முளையிடல், பிராசாத சுத்தி அஸ்திர கலச பூஜை, ராக்÷ஷாக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து கலச புஜைகள், வாஸ்து பலி வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்யாகம், அத்தாழ பூஜை ஆகியன நடந்தது. இரண்டாம் நாளான இன்று (21ம் தேதி) முதல் 26-ம்தேதி வரை தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. 27-ம் தேதி காலை 8.45 மணி முதல் 9.45 வரை ஸ்ரீபகவதி அம்மன் மற்றும் பரிவார விமானங்களுக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள். மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள், பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஸ்ரீமுலவெங்கடேசன், மேலாளர் சோணாச்சலம், உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், மராமத்து பொறியாளர் ராஜகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.