பதிவு செய்த நாள்
22
பிப்
2013
11:02
திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் குவிந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பலவகை காவடி எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி கோலத்திலும், நாளை பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி அருள்பாலிக்கிறார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரம், நாகர்கோவில்,கோவில்பட்டி உள்ளிட்ட பல பகுதியிலிருந்தும் பாதயாத்திரையாக வந்து குவிந்த பக்தர்கள், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பலவகை பாதயாத்திரையாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் பக்தர் வெள்ளத்தில் நிறைந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (22-ம் தேதி) 7ம் திரு விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 8.45 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருள்பாலித்து பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை 23ம் தேதி 8ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச்சாத்தி வீதி உலாவும், காலை 10.30 மணிக்கு 11.30 மணிக்குள் பச்சைக்கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதிஉலா வந்து கோவில் வந்து சேர்கிறார். 24-ம் தேதியன்று 9ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழச்சியான தேரோட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் மீன லக்னத்தில் தேரோட்டம் துவங்குகிறது. வரும் 26-ம் தேதி 11ம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா உட்பட கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.