அபிராமி அம்மன் கும்பாபிஷேக நித்யபூஜைக்காக அத்திமர சிலை வடிவமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2013 11:02
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணியின் போது நடைபெறும் நித்ய பூஜைக்காக அத்திரமரத்தில் சிலைகள் வடிவமைக்கும் பணி துவங்கியது.திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இடையூறு இல்லாமல் பணிகள் முடிவடைய வேண்டும் என்பதற்காக பிப். 25 ல் ஸ்ரீருத்ர யாகம் கோயிலில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்றனர். திருப்பணி முடிவடையும் வரை நித்ய பூஜைக்காக அத்திமரத்தில் சிலைகள் வடிவமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த சிலைகள் பிப். 15 ல் பாலாலயம் செய்யப்பட்டு வெள்ளை விநாயகர் கோயில் அருகில் உள்ள காசிபிள்ளை பேட்டை பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்.கும்பாபிஷேக திருப்பணிக்காக கோயிலின் தற்போதைய வடிவமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உட்பிரகாரங்கள் அனைத்தும் புதுபொலிவுடனும், கலை நுணுக்கங்களுடன் கோபுரங்களை பிரமாண்டமான கம்பீரத்துடனும், இப்போதைய நிலையிலிருந்து கோயிலின் உயரத்தை மேலும் ஏழடி அதிகரிப்பதற்குமான முயற்சிகளை திருப்பணிக்குழு மேற்கொண்டுள்ளது. இந்த திருப்பணி இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பணிக்குழுவின் தலைவர் வேலுசாமி கூறுகையில், ""பாலாலயத்திற்கு முன்னதாக மூன்று நாள் இடைவெளியில் கடைகளை கோயில் திருப்பணிக்காக காலி செய்து தருவதாக உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். கிழக்கு பகுதியில் கடை வைத்திருந்தவர்களுக்கு அதே இடத்தில் மூன்று மாதத்திற்குள்ளும், மேற்கு பகுதியில் உள்ளவர்களுக்கு பெங்காளி மார்க்கெட் பகுதியிலும் திருப்பணிக்குழு சார்பில் கடைகள் கட்டி கொடுக்கப்படும். கோயிலின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் உள்ள கடைகள் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும், என்றார்.