பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
கன்னியாகுமரி: அய்யா வைகுண்டசாமியின் 181-வது அவதாரதினம் வரும் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் இருந்து சாமிதோப்பிற்கு பிரம்மாண்ட ஊர்வலம் நடக்கிறது. அய்யாவைகுண்டசாமியின் அவதாரதினம் மாசி மாதம் 20-ம் தேதி (மார்ச் 4-ம்தேதி)கொண்டாடப்படுகிறது. 181-வது அவதாரதினத்தை முன்னிட்டு லட்சகணக்கான அய்யாவழி பக்தர்களின் பிரம்மாண்டமான ஊர்வலம் நாகர்கோவிலிருந்து சாமிதோப்பிற்கு வருகிறது. விழாவினை முன்னிட்டு 3-ம்தேதி காலை அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் இருந்து நாகர்கோயில் நோக்கி வாகன பவனி ஒன்று புறப்படுகிறது. இப்பவனி திருச்செந்துர், திசையன்விளை, உடன்குடி, கூடன்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக மாலை 6 மணியளவில் நாகர்கோவில் நாகராஜதிடலை வந்தடைகிறது. வரும் 3-ம் தேதி பகல் 2 மணிக்கு அய்யா வைகுண்டசாமி சிறையில் இருந்த திருவனந்தபுரம் சிங்காரதோப்பில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயில் வடக்குநடையில் இருந்து மற்றொரு வாகனபேரணி புறப்பட்டு நெய்யாற்றின்கரை, பாறசாலை, களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, வழியாக நாகர்கோயில் நாகராஜதிடலை இரவு 7 மணிக்கு வந்தடைகிறது. 3-ம்தேதி மாலை 3 மணிக்கு சாமிதோப்பு தலைமைபதியில் இருந்து ஆதலவிளை மலையில் வைகுண்டர்தீபம் ஏற்றுவதற்காக மகாதீப ஊர்வலம் புறப்படுகிறது. இரவு 7 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு நாகர்கோவில் நாகராஜாதிடலில் அய்யாவழி சமயமாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் சொற்பொழிவு, இசைநிகழ்ச்சி,திருஏடுவாசிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிரம்மாண்ட ஊர்வலம்: அய்யா வைகுண்டரின் அவதாரதினமான வரும் 4-ம் தேதி காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜதிடலிலிருந்து லட்சகணக்கான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான மாசி ஊர்வலம் துவங்குகிறது.பாலபிரஜாதிபதி அடிகள் தலைமை வகிக்கிறார். பாலலோகாதிபதி, கிருஷ்னராஜ் முன்னிலை வகிக்கின்றனர். ஊர்வலத்தில் அய்யாவின் அகிலத்திரட்டை தாங்கிய வாகனமும், முத்துக்குடைகளுடன், ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்குதாமரைகுளம் வழியாக காலை 11 மணியளவில் சாமிதோப்பு தலைமைபதி வந்தடைகிறது. இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்கின்றனர். ஊர்வலத்திற்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு கொடுக்க படுகிறது. ஊர்வலத்தில் வரும் பக்தர்கள் பதியில் சென்று அய்யாவை வழிபடுகின்றனர். இரவு சாமிதோப்பில் வாகன பவனி, அன்னதர்மம், சமயமாநாடு, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அவதாரதின விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்துர், நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பதி நிர்வாகிகள் பால பிரஜாபதிஅடிகள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.