பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
சென்னை: சைவ சமயம் குறித்த, பல்வேறு தகவல்கள் அடங்கிய, "சைவ சமய கலை களஞ்சியம் என்ற நூல், 10 தொகுப்புகளாக வெளியிடப்பட உள்ளது. இந்த ஆன்மிக கலை வரலாற்று நூலில், 5,000 ஆண்டு கால, சைவ சமயம் தொடர்பான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. சைவ சமயம் குறித்த, கலைக்களஞ்சியங்கள் இதுவரை வெளிவரவில்லை. தமிழ் மொழியில், சைவ சமயம் சார்ந்த, அனைத்து குறிப்புகளையும் 10 தொகுப்புகளாக, "சைவ சமய கலைக்களஞ்சியம் என்ற பெயரில், பேராசிரியர் இரா.செல்வகணபதி தொகுத்துள்ளார். இந்த ஆய்வில் அவர் ஆறு ஆண்டுகள் செலவழித்து உள்ளார்.சைவ சமயம் தொடர்பான, வரலாற்று குறிப்புகள், மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப சடங்குகள், கோவில் பிரார்த்தனைகள் என, அனைத்து தகவல்களும், இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.சைவ சமய வரலாற்றை, உலகம் மற்றும் தமிழகம் என இருவேறு பிரிவுகளில், செல்வகணபதி தொகுத்துள்ளார். மற்ற நாடுகளில், சைவ சமயம் இருந்ததற்கான ஆவணங்களை, படங்களுடன் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம் உள்ளிட்ட 30 மடங்கள், கடைப்பிடிக்க வேண்டிய சைவ விரதங்கள் போன்ற தகவல்களும் இதில் அடக்கம் .தமிழ் வேதமாகக் கருதப்படும், பன்னிரு திருமுறைகள் பற்றிய செய்திகள், "சைவ திருமுறைகள் என்ற தலைப்பில், தொகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 2,500 சிவத்தலங்கள், 1,500 முருகன் ஆலயங்கள் மற்றும் சன்னிதிகள், 108 சிவசக்தி பீடங்கள், விநாயகர் கோவில்கள், 999 நாட்டுப்புற தெய்வங்களின் வாழிடங்கள் என, அனைத்து சைவ தெய்வங்களின் குறிப்புகளும் அமையப்பெற்றது இதன் சிறப்பாகும்.இந்த தொகுப்புகள் பிரிவு வாரியாக, அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. 10 தொகுப்புகளின் விலை 15 ஆயிரம் ரூபாய். இந்த தொகுப்புகள், மே மாதம் சென்னையில் வெளியிடப்படும் என்று நூலாசிரியர் செல்வகணபதி தெரிவித்தார்.நூல் குறித்த, தகவலுக்கு, 98404 95653, 94440 21113 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நூலுக்கு நன்கொடை அளிப்போருக்கு, வருமான வரி விலக்காணை பெறப்பட்டுள்ளது.