பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
சிதம்பரம்: ""மகா சிவராத்திரி நாளில் 1008 சிவாலாயங்களில் சிவபுராணம் பாடல், ஆன்மிக உபன்யாசம் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என, நாட்டியாஞ்சலி விழாவில், முதன்மைச் செயலர் ஜவகர் பேசினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி துவக்க விழாவில், அவர் பேசியதாவது: நம் மூதாதையர் ஏற்படுத்திய கோவில்கள், கலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். பரதக்கலை தற்போது, அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாம் பரத நாட்டியம் பார்க்க வேண்டுமானால் அமெரிக்கா, இத்தாலி, லண்டன் என, வெளிநாடுகளுக்கு சென்று தான் பார்க்க வேண்டி வரும். நடராஜருக்கு நான்கு கைகள். அவரது ஒரு கையில், உடுக்கை; இது, பக்தர்களுக்கு அறிவை ஏற்படுத்தும். மற்றொரு கையில், அக்னி; இது அறியாமையை பொசுக்கும். மூன்றாவது கை, பூமியை நோக்கி இருக்கும்; இது சரணாகதி என பொருள்படும். பக்தர்கள், கடவுளிடம் சரணாகதியடைந்தால் வாழ்க்கையில் இன்பமாகவும், மன நிறைவுடனும் இருக்கலாம் என்பதை, இது உணர்த்துகிறது. நான்காவது கை, அபயஹஸ்தம்; மற்ற மூன்றையும் கடைபிடித்தால், அருள் கிடைக்கும் என, பொருள் அடங்கியுள்ளது.
உலகில் உள்ள நாட்டியக் கலைஞர்கள் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி மேடையில் ஏறி ஆடுவதை பெருமையாகக் கருதுகின்றனர். வரும் ஆண்டுகளில் நாட்டியாஞ்சலி விழாவை ஒன்பது நாட்கள் நடத்த வேண்டும் என அரசு மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் ஜெயலலிதா அனுமதி பெற்று தமிழகத்தில் உள்ள 1008 சிவாலாயங்களில் மகா சிவராத்திரி அன்று சிவபுராணம் பாடல் பாடுவது, ஆன்மிக உபன்யாசம் மற்றும் நாட்டியம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதன்மைச் செயலர் ஜவகர் பேசினார்.