பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
ஊட்டி: ஊட்டி காந்தல் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஊட்டி காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் எழுந்தருளியுள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. அன்று மாலை 3:00 மணிக்கு காந்தல் ஆதிபராசக்தி மகளிர் குழுவினர், ஊட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம், காசி விசாலாட்சியம்பாள் மகளிர் குழு சார்பில், திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு மகா பிரதோஷ விழா நடந்தது. நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகம், வெண்ணை அலங்காரம், காசி விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம், மாலை 5:30 மணிக்கு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவ மூர்த்தி ஆலயம் வலந்தார். இரவு 7:00 மணிக்கு பிரசாத விநியோகிக்கப்பட்டது. நேற்று காலை 7:00 மணிக்கு காலசாந்தி பூஜை, 11:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. காலை 11:30 மணிக்கு அன்னதானம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை 3:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி கோயிலை வலம் வந்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு நாத பிரம்ம சங்கீத சபாவின் கர்நாடக சங்கீதம், மாலை 6:30 மணிக்கு பரதநாட்டியம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு நகை சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் இடம் பெற்றது. இன்று காலை அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.