பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
அவிநாசி: மகா சிவராத்திரி விழாவையொட்டி, அவிநாசி கோவிலில், நேற்று முன்தினம் இரவு முதல் விடியவிடிய சிவபூஜை செய்து, சிவனடியார்கள் வழிபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவாலயமான, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு துவங்கியது. 8.00 மணிக்கு முதல் கால பூஜை துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்து, வேதங்கள் பாராயணம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இரவு 10.30 மணி, நள்ளிரவு ஒரு மணி, அதிகாலை 4.00 என நான்கு கால பூஜைகள் நடந்தன. அவிநாசிலிங்கேஸ்வரர் சன்னதி முன், காசியிலிருந்து தருவிக்கப்பட்ட பாணலிங்கம், ஆவாஹணம் செய்யப்பட்டு, இரவு முதல் தொடர்ந்து, பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். கருணாம்பிகை அம்மன் ராஜகோபுர மண்டபத்தில், சிவனடியார்கள் லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம், சிவபூஜைகளை விடிய விடிய செய்தனர். திருப்பூர், அவிநாசி வட்டாரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாசகம், பெரியபுராணம் உள்ளிட்டவைகளை முற்றோதல் பாராயணத்தை, பக்தர்கள் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், டி.எஸ்.பி., ரங்கசாமி தலைமையில்,போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். சபா மண்டபத்தில், ஜெகன் நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் சமாஜ் சேவா அறக்கட்டளை குழுவினரின் கூட்டு வழிபாடு, பஜனை ஆகியன நடந்தது.
* அவிநாசி, கொங்கு கலையரங்கில் ஈஷா யோகா மையம் சார்பில், மகா சிவராத்திரி விழா நடந்தது. குரு பூஜை, கூட்டுப்பிரார்த்தனை, பிரசங்கம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. யோக மைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளியங்கிரி பூண்டி அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்த நிகழ்ச்சிகள், நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.