பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் மயானக் கொள்ளை திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரிக்கு மறுநாள், அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம் கொண்டாடப்படுகிறது. நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும், மாலை மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. பெரியகாஞ்சிபுரம் மார்க்கெட்டில் மூன்றாம் ஆண்டாக, அங்காளபரமேஸ்வரி அம்மன் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. அலங்கார வரிசை காலை 8:00 மணிக்கு, கிழக்கு ராஜவீதியிலிருந்து, 501 பால்குடம் எடுத்து செல்லப்பட்டது. காலை 9:00 மணிக்கு, மளிகை செட்டி தெருவில் அமைந்துள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு, அலங்கார வரிசை எடுத்து செல்லப்பட்டது. பகல் ஒரு மணிக்கு, அம்மன் புறப்பாடு நடந்தது. பெருமாள் தெருவில் உள்ள பட்டனத்தார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயானக்கொள்ளைப் பெருவிழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. சிவராத்திரி அன்று அம்பாள் சிவபார்வதி சமேதரராக, நான்கு ராஜவீதிகளை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் அம்பாள், 32 கரங்களுடன், மகிஷாசூரமர்த்தினியாக, சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று இரவு அம்பாள் ஊர்வலம் நடந்தது. இன்று இரவு ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. காப்பு கட்டி... ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மூல மண்டபம் அருகில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் அமாவாசை அன்று, மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், நேற்றுமுன்தினம் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. விழாவையொட்டி, பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, உடலில் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் உடலில் அலகு குத்தி, பூத்தேர் இழுத்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், செட்டித் தெரு, திருமங்கையாழ்வார் தெரு, தேரடி, காந்தி ரோடு வழியாக, தேசிய நெடுஞ் சாலை அருகில் உள்ள மயான பூமியை சென்றடைந்தது. அங்கு மயானக் கொள்ளை நிறைவு விழா நடந்தது. திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த படூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 58வது ஆண்டாக, நேற்றுமுன்தினம் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. மாலை அணிந்து பக்தர்கள் தீச்சட்டியுடன் ஊர்வலம் வந்தனர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்று கன்னியம்மன் கோயிலில் துவங்கி ரதம் இழுத்தல், மாட்டு வண்டியில் பறந்து வருதல், வேல் குத்தி வருதல், ரோலர் வலித்தல், எலுமிச்சம்பழம் குத்துதல் என, பிரார்த்தனைகள் நிறைவேற்றலுடன் அம்மன் ஊர்வலம் நடந்தது. மயானத்தில், விளைச்சல் பொருட்களை வீசி அம்மனை வழிபட்டனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மதுராந்தகம்:மேலவளம்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், நேற்றுமுன்தினம் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. சிவராத்திரி அன்று இரவு 8:00 மணிக்கு, சிவனை பூஜை செய்த கோலத்தில் அம்மன் திருவீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மறுநாள் காலை சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதணை நடந்தது. பகல் 2:00 மணிக்கு மயானம் சென்று திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலிலும், மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. சிலம்பாட்டம் செங்கல்பட்டு, ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில், நேற்றுமுன்தினம் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, பாலாற்றங்கரையிலிருந்து அக்னி கரகம், ஆடும் கரகம், பூங்கரகம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன், அம்மனை கோயிலுக்கு அழைத்து சென்றனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, கார், வேன், ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களை இழுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். பாலாற்றில் எழுந்தருளிய அம்மனை வழிபட்டனர். இரவு வீதியுலா நடந்தது.