பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
தலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனூர் பருவதராஜ குல அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த மயானக் கொள்ளை விழாவில், 700 ஆடு, கோழிகள் பலியிடப்பட்டது.
தலைவாசல் அருகே, வீரகனூர் பருவதராஜ குல அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா, 10ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்கிறது. கடந்த, 10ம் தேதி காலை, 108 பால் குட ஊர்வலம், அம்மனுக்கு பால் அபிஷேகம், கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல், பூங்கரகம் எடுத்து வந்து, அலகு நிறுத்தல் நிகழ்ச்சி நடந்தது. காடு வளைப்பு, வள்ளாளராஜன் கோட்டை இடித்து மயானம் சூறை இடுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சுவேத நதியில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, மழை வேண்டியும், உலக நன்மைக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அம்மன் வேடமணிந்து வந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள், வீரகனூர் முக்கிய வீதிகளில் ஸ்வாமி ஊர்வலம் எடுத்துச் சென்றனர். அப்போது, பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய, 500 கோழிகள், 200 ஆட்டுக் குட்டிகளின் கழுத்தை கடித்து, ரத்தம் குடித்தனர். இவ்விழாவில், ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.