பண்ணாரி மாரியம்மன் வீதி உலா துவக்கம் "மாரியம்மா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2013 11:03
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன் நேற்று காலை முதல் சப்பரத்தில் வீதி உலா சென்றது. அப்போது பக்தர்கள், "மாரியம்மா, மாரியம்மா என கோஷமிட்டு வணங்கினர். சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் கடந்த திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி மூலம் இக்கோவிலின் இந்தாண்டுக்கான குண்டம் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் புறப்பட்டு சிக்கரசம்பாளையத்துக்கு நேற்று காலை வந்தது. சிக்கரம்பாளையம் பகுதி கிராமங்களில் நேற்று முழுவதும் வீதி உலா சென்றது. அப்போது பெண்கள், "மாரியம்மா என, கோஷமிட்டு சப்பரத்தில் வந்த மாரியம்மனுக்கு குடத்தில் தண்ணீர் ஊற்றியும், தேங்காய், பழம் வைத்து வணங்கினர். பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரையில் படுத்து வணங்கினர். மாலை சிக்கரம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு புதூர் மாரியம்மன் கோவிலில் சப்பரத்துடன் தங்கினர். இன்று (14ம் தேதி) வெள்ளியம்பாளையத்தில் வீதி உலா முடித்துவிட்டு மாலை கொத்தமங்கலம் வழியாக இரவு தொட்டம்பாளையம் சென்று அங்குள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் தங்குகிறது. பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதி உலா செல்லும்போது மலைவாழ் மக்கள் பீனாச்சி வாத்தியம் மற்றும் தாரை, தப்பட்டையுடன் சப்பரத்தின் முன்னால் சென்றனர். நாளை வெள்ளியம்பாளையம் புதூர் கிராமத்தில் ஒவ்வொரு வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, இரவு அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்குகிறார்.