பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில்,புதிய தேரில் சக்கரம் பொறுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.விரைவில்,தேர் வெள்ளோட்டமிடப்பட உள்ளது. தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதியதேர் செய்யும் பணி 17 லட்சம் ரூபாய் செலவில் 2005 ம் ஆண்டில் துவங்கியது. மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகம் சார்பில், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது.சில மாதங்கள் பணியில் தொய்வு ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது.பின் மீண்டும், தேர் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டது.கடந்த எட்டு மாதங்களாக தேர் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 27 அடி உயரம் கொண்ட புதிய தேர், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. திருச்சி பெல் நிறுவனத்தில் தாயாரிக்கப்பட்ட, நான்கு இரும்பு சக்கரங்கள் தேரில் பொறுத்தப்பட்டுள்ளது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில் கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், கோண அடுக்கான 2ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3ம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், 4ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.தேர் செய்யும் சிற்பி ஆறுமுகம் கூறியதாவது: மர சிற்பம் தொடர்பான பணிகள் முழுமை அடைந்துள்ளன. சக்கரங்களும் பொறுத்தப்பட்டு விட்டது. பெயின்டிங் உட்பட மீதம் உள்ள சில வேலைகள் விரைவில் முடிந்து விடும். இம்மாத இறுதிக்குள் தேர் வெள்ளோட்டம் விடப்படும்,என்றார். கடந்த சித்திரை மாதம் நடந்த விழாவில், பழைய தேரின் அச்சு முறிந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் புதிய தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் கதலிநரசிங்கப்பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் உள்ளனர்.