பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த தீமிதி விழாவில் 25 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 10ம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. முக்கிய திருவிழாவான திருதேர் வடம் பிடித்தல் நாளை (16ம் தேதி) மாலை நடக்க உள்ளது.நேற்று மாலை மேல்மலைனூர் அங்காளம்மன் கோவில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்மனும், காப்பு கட்டிய பக்தர்களும் அக்கினி குளத்தில் இருந்து ஊர்வமாக வந்தனர். கோவில் முன் அமைத்திருந்த தீக்குண்டத்தில் சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதீனம் முதலில் தீக்குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோவில் மேலாளர் முனியப்பன் மற்றும் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தீக்குண்டம் இறங்கினர். பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தீமித்தனர். சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். அலகு குத்திய பக்தர்கள் லாரிகளில் தொங்கியும், லாரிகளை இழுத்தும் வந்தனர். செடல் குத்திய பக்தர்கள் பரவை காவடி மூலம் ஆகாய மார்க்கமாக கயிற்றில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்து, பூஜைகள் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் சின்னதம்பி, மேலாளர் முனியப்பன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் ஆகியோர் செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் தலைமையில் போலீசாரும், தீயணைப்புத்துறை உதவி கோட்ட அலுவலர் தாமோதரன் தலைமையில் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.