பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவின் 10 நாட்களிலும் மின்சாரம் தடையின்றி விநியோகம் செய்யப்படும். வருகின்ற மார்ச் 18ல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். பழநி பங்குனி உத்திர திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடாசலம் தலைமையிலும், கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் முன்னிலையிலும் நடந்தது. டி.எஸ்.பி., ஜானகிராமன், எம்.எல்.ஏ., வேணுகோபாலு, நகராட்சி தலைவர் வேலுமணி, கமிஷனர் பாலகிருஷ்ணன், மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுபணித்துறை, மருத்துவதுறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் "இடும்பன் குளத்தில் சுகாதாரமற்ற நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறபடுத்த வேண்டும். முடிகாணிக்கை கூடுதலாக வசூல் செய்வதாகவும் புகார் வந்துள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தரவேண்டும். வருகின்ற மார்ச் 18ல் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நகரின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவேண்டும். எனக்கூறினார். கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்," பஸ், வேன் போன்ற வாகனங்கள் கலைக்கல்லூரி வளாகத்திலும், வின்ச் ஸ்டேசன் எதிரே உள்ள கோசாலா வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைகோயிலில் சுகாதார துறை மூலம் இரண்டு மருத்துவ குழுக்கள் இயங்கும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என கோயில் சார்பாக அறிவிப்பு செய்யப்படும், என்றார்.பழநி நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில்," நகரின் 15 இடங்களில் தற்காலிக குடிநீர் பந்தல்கள், திருவிழாவிற்காக 500 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள். பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றார். தற்காலிக பஸ் ஸ்டாண்டு இல்லை: பழநி நகராட்சிமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் தேவையில்லை. தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட் போதுமானது என போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து அதிகாரிகளும் இதே கருத்தை தெரிவித்தனர். தேவைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 300 சிறப்பு பஸ்கள் இயக்கப் பட உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவின் 7 நாட்களில் மின்சாரம் தடையின்றி விநியோகம் செய்யப்படும் என மின்வாரியதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். பத்து நாட்களும் தடையில்லா மின் வினியோகம் செய்ய கலெக்டர் வலியுறுத்தினார்.