பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நேற்றுடன் நிறைவடைந்தது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா கடந்த 10ம் தேதி துவங்கியது.விழாவில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், ஒடிஸி, கதக், கவுடிய நிருதயா போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளை நடராஜருக்கு அர்ப்பணித்தனர். நேற்று சென்னை மகதி இசை நாட்டியப்பள்ளி, சிதம்பரம் சிவசக்தி நாட்டியப்பள்ளி போன்ற பெங்களூரூ, டில்லி, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் போன்ற பல பகுதிகளில் உள்ள நாட்டியப் பள்ளி மாணவியர்கள் நாட்டியம் ஆடினர்.நிறைவு விழாவில் கலெக்டர் கிர்லோஷ்குமார் பங்கேற்றார்.விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் நடராஜன், செயலர்கள் டாக்டர் நாகசாமி, வழக்கறிஞர் சம்மந்தம், பொருளாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் சுவாமிநாதன், ராமலிங்கம், நடராஜன், ராமநாதன், கணபதி, பாலதண்டாயுதம், டாக்டர் முத்துக்குமரன், சபாநாயகம் மற்றும் கோவில் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
உண்டியல் திறப்பு: சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியலில் பக்தர்கள் 13.36 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தினர்.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் @காவிலில் வைக்கப்பட்டிருந்த 9 உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டன.பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், ஆய்வாளர் தங்கராஜ், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். அதில், 13 லட்சத்து 36 ஆயிரத்து 530 ரூபாய் இருந்தது.மேலும், மலேசியா ரிங்கட் 83, அமெரிக்கா டாலர் 36, இலங்கை ரூபாய் 180, இங்கிலாந்து பவுண்ட் 10, பிலிப்பைன்ஸ் டாலர் 10 இருந்தன. உண்டியல் தொகையினை சிதம்பரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் எண்ணி சரி பார்த்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.கடைசியாக 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி திறக்கப்பட்ட உண்டியலில் 5 லட்சத்து 16 ஆயிரத்து 494 ரூபாய் இருந்தது. இந்த முறை இரு மடங்குக்கு மேல் காணிக்கை கிடைத்துள்ளது.