பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு கோயில் திருவிழாவில் உண்டியல் மூலம் 37 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 3.75 லட்சம் ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா, கடந்த 3ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவிற்காக, மாசி மாதம் ஒன்றாம் தேதி முதலே கோயிலுக்கு பக்தர்கள் வரத் துவங்கினர். இதனால் கோயில் நிர்வாகத்தினர் அன்று முதல் திறந்த வார்ப்பு காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்தனர். இது, திருவிழா துவங்குவதற்கு முன் எண்ணப்பட்ட போது 6,88,626 ரூபாய் வசூலானது. அடுத்து, மூன்றாம் திருவிழாவன்று எண்ணப்பட்டதில் 3,30,991 ரூபாய் கிடைக்கப்பெற்றது. மூன்றாவதாக நேற்றுமுன்தினமும், நேற்றுமாக திருவிழாவிற்கு வசூலான காணிக்கை எண்ணப்பட்டது.இதில் 9 நிரந்தர உண்டியல்கள், 7 குடங்கள் மற்றும் திறந்த வார்ப்பில் வசூலான மொத்த காணிக்கையும் எண்ணப்பட்டது. சுசீந்திரம் இணை ஆணையர் ஞானசேகர், துணைஆணையர் அருணாச்சலம், முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், பத்மநாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் நிர்மல்குமார், முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜீவானந்தம், ஆய்வாளர் கோமதி, மராமத்து பொறியாளர் அய்யப்பன், கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகாதரன், குழித்துறை ஸ்ரீதேவிகுமாரி கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவியர், மண்டைக்காடு தேவஸ்வம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.26,77,088 பணமாகவும், 22 கிராம் தங்கம், 66 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க 10 டாலரில் ஒன்றும், சவுதி 5 ரியால் இரண்டும், சிங்கப்பூர் டாலர் இரண்டும் வசூலானது. மாசி ஒன்றாம் தேதி முதல் அம்மாதம் கடைசி வரை (10 நாள் திருவிழாவுடன் சேர்த்து) வசூலான 36,96,705 ரூபாய், கடந்த ஆண்டு வசூலான பணத்தை விட, 3,75,114 ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.