Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உதயண குமார காவியம் பகுதி-2
முதல் பக்கம் » உதயண குமார காவியம்
உதயண குமார காவியம் பகுதி-1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
04:03

உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.

இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும். இந்நூலின்கண் 367 செய்யுட்கள் உள்ளன.

உஞ்சைக் காண்டம்

கடவுள் வாழ்த்து

மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே. 1

பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்
இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம். 2

அவையடக்கம்

மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம். 3

பயன்

ஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்
கூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்
மாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்
வீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ. 4

நாட்டுச் சிறப்பு

இஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்
புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி
விஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்
எஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே. 5

நாவந்தீவு

பூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்
நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே. 6

வத்தவநாடு

வேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப்
போதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில்
ஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று
வாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே. 7

கோ நகரம்

இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம்
எஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி
அஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட
குஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே. 8

முகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே
இகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும்
பகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்
நகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே. 9

அரசன்

ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து
வான் உமிழ் வாரியன்ன வண்கையன் வண்டு அரற்றும்
தேன் உமிழ் இலங்கற்றோளான் செல்வத்தில் குபேரன் அன்னான்
தானுமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசனாமே. 10

கோப்பெருந்தேவி

மன்னன் உள்ளத்துள்ளான் மாமணி மயிலஞ் சாயல்
அன்ன மென்னடை வேற் கண்ணாள் அருந்தது அனைய நங்கை
பொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை அமிர்தம் அன்னாள்
மின்னு நுண் இடையாள் நாம மிகாவதி என்று மிக்காள். 11

கற்புடைத் திருவினங்கை காரிகை தன் வயிற்றில்
சற்புருடன் ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க
நற்புடைத் திங்கள் ஒன்பா னன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்
பொற்புடை மஞ்ச மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில். 12

மிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்

செந்துகின் மூடிக்கொண்டு திருநிலா முற்றந்தன்னில்
அந்தமாய்துயில் கொள்கின்ற ஆயிழை தன்னைக் கண்டே
அந்தரத்தோடுகின்ற அண்ட பேரண்டப்புள் ஒன்று
அந்தசையென்று பற்றியன்று வான் போயிற்று அன்றே. 13

மற்றவடந்தை தானுமாமுனியாகி நிற்கும்
சற்கிரி விபுல மன்னும் சாரலவ் வனத்திற் சென்று
நற்றவனருகில் வைப்ப நற்றுயில் விட்டெழுந்தாள்
பற்றுயிர் உண்ணாப்புள்ளும் பறந்து வான் போயிற்றன்றே. 14

அரசி கருவுயிர்த்தல்

நிறைமதி முக நன் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்
பொறைவயினோய் மீக்கூரப்பொருவில் வான் கோள்கள் எல்லாம்
முறையினல் வழியை நோக்க மொய்ம்பன் அத்தினத்தில் தோன்ற
அறையலை கடலில் சங்க மாணி முத் தீன்ற தொத்தாள். 15

பொருகயற் கண்ணினால் தான்போந்ததை யறிந்தழுங்கித்
திருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக்கண்டு
பெருகிய காதலாலே பெருந்துயர் தீர்த்திருப்ப
மருவு நற்றாதையான மாமுனி கண்டு வந்தான். 16

குழந்தைக்குப் பெயரிடல்

தவமுனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி
அவண் இனிது ஓம்பவப்பால் அருக்கனன் உதயகாலத்து
உவமையின்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்
இவணமத் தாயும் சேயும் இருடிபாலிருந்தார் அன்றே. 17

உதயணன் பெற்ற பேறுகள்

பிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்
இருவரும் வளர்ந்தே இன்பக்கடல் நீந்திக் காணக்
கரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்
புரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனியருளிற் பெற்றான். 18

உதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்

மைவரை மருங்கினின்ற மலையென விலங்குகின்ற
தெய்வ நல்லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்
பையெனக்களிறுங் கேட்டுப் பணிந்தபடி யிறைஞ்சி நின்று
கையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான். 19

தெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்

நன்றிருட் கனவினாக நயமறிந்து இனிது உரைக்கும்
பன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும்
இன்றை நாள் முதலா நீ நானின்றியே முன் உண்டாலும்
அன்று உன்பானில்லேன் என்றே அக்கரி உரைப்பக் கேட்டான். 20

உதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்

செல்லும் அக்காலம் தன்னில் செறிந்தவன் புதல்வனான
வெல்களிற்றி யானை வேந்தன் விக்கிரன் தனக்கு மக்கள்
இல்லையென்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல
சொல்லருண் முனிவன்பாதம் தொழுது நன்கிருந்தான் அன்றே. 21

விக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்

புரவலனில் இனியராம் இப்புதல்வர்கள் யார்கொலென்ன
வரமுனியருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயமெல்லாம்
சிரசணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப்போக்கி
விரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான். 22

உதயணன் அரசுரிமை பெறுதல்

முனியொடு தங்கை தன்னை முயன்றிரந் தெய்தி நாகம்
தனையன வெங்கயத்திற் றனயனையேற்றிப் போய்த்தன்
மனனிறை நாட்டை அந்த மருகனுக்கீந்து போந்து
முனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றானன்றே. 23

சாதானிகன் மிருகாபதியைக் காணல்

இளமையை இகந்து மிக்க இனிய நற்குமரனாகி
வளமையில் செங்கோல் தன்னை வண்மையினடத்தினானாங்
இளமயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்
உளமலி கொள்கை யான்ற வொருதவற்கண்டு உரைத்தான். 24

மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்

தேவியின் வரவு நல்ல திருமகன் செல்வுங் கேட்டு
மாவலன் மனமகிழ்ந்து வந்தூர் புக்கிருக்கு நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்த நற்புதல்வர் தம்மைத்
தேவிளங்குமரர் போலச் செவ்வியிற் பயந்தாளன்றே. 25

பிங்கல கடகரென்று பேரினிதிட்டு மன்னன்
தங்கிய காதலாலே தரணியாண்டினிது செல்லக்
குங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்
அங்குள தேசமெல்லா மடிப்படுத் தினிதிருந்தார். 26

சதானிகன் துறவியாதல்

உதயணகுமரன் தன்னை யுற்றுடனழைத்துப் பூமிப்
பதமுனக்காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்
கதமுறு கவலை நீங்குங் காட்சி நற்றவத்தனாகி
இதமுறு யோகந்தன்னில் எழில் பெற நின்றான் அன்றே. 27

உதயணனுடைய அமைச்சர்கள்

மணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவனானான்
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்
தணிவில் சீர் யூகியோடு சாருரு மண்ணுவாவும்
துணை வயந்தகனும் தொல்சீர் இடபகனும் என்பவாமே. 28

உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்

அரசனுக் கினியராகி அமைச்சியனடத்திச் செற்றே
வருபகை பலவுந்தேய வரச்செங்கோல் உய்க்குங்காலை
அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளமாழாந்து
கரிணத்தை மறந்து விட்டுக் காதலினடிசிலுண்டான். 29

தெய்வ யானை மறைந்து போதல்

மன்னிய தெய்வயானை மாயமாய் மறைந்துபோக
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்
துன்னிய சோக மேவுத்துயரெய்தித் தேடுக என்றான்
பன்னருஞ் சேனை சென்று பாரெங்கும் தேடித்தன்றே 30

உஞ்சை நகர்

சிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்
அந்த மாகும் அவந்தி நன்னாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வளநகர்
உந்து மாளிகை யுஞ்சயினிப் பதி. 31

பிரச்சோதன மன்னன்

உரைப்பரும் படையோர் பிரச் சோதனன்
நிரைத்த மன்னர் நிதி மிக்களப்பவே
தரித்த நேமியுருட்டித் தரணியாண்டு
உரைத்த மாக்களி ற்றே றேறோடு மன்னுவான். 32

பொருவின் மன்னவன் பொன் திறை கேட்புழித்
திருவமன்னர் திறை தெரியோ லையுள்
ஒரு மகன் புள்ளியிட்ட தறிந்திலன்
மருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன். 33

பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்

தாமரைக் கண்டழல் எழ நோக்கியத்
தீமை செய்த திறைக் கடன் மன்னனை
நாமறந்திட நன்கு மறைத்த தென்
ஆமமைச்ச ரென்று அண்ணல் வினவினான். 34

அமைச்சர் விடை

உறு களத்தினில் உன்னிய ஆண்மையும்
பெறு பொருள்செறி பீடுடைக் கல்வியும்
தறுகண் வேழம் தசைக்குறு பெற்றியும்
மறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும். 35

வளமையின் வந்த மன்னிய செல்வமும்
இளமை இன்பம் எழில் நல நற்குலம்
உளவன் ஆதலின் உற்ற கடனென
அளவு நீதி அமைச்சர் உரைத்தனர் 36

பிரச்சோதனன் சினவுரை

வேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்
போந்தவற் பற்றிப் போதரு வீரெனச்
சேர்ந்த மைச்சரகள் செய்பொருள் என்னென்று
மாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார். 37

அமைச்சர் சூழ்ச்சி

ஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும்
ஆனை போக அரசன் இரக்கமும்
கான யானையைக் காட்டிப் பிடிப்பதும்
மான வேலவர் மந்திரித்து ஒன்றினார். 38

அமைச்சர் மாய யானை செய்தல்

அரக்கினும் மெழு காக்கிய நூலினும்
மர த்தினுங்கிழி மாவின் மயிரினும்
விரித்த தோலினும் வேண்டிய வற்றினும்
தரித்த யானையைத் தாமிக் கியற்றினார். 39

அமைச்சர்கள் யானையை செலுத்துதல்

பொறியமை சுரிப் பொங்கும் உதரத்தில்
உறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை
மறையு மாயுதம் வைத்த தனோருடல்
நெறி கண்டூர்ந்தனர் நீல மலையென. 40

சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்

கார்முழங்கில் களிறொலி செய்யவே
போர் மிக்க ஆனையைப் பொற்புடை மன்னன்முன்
ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள்
சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன். 41

சாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்

சாலங் காயநீ சார்ந்து தருகென
ஞாலம் காக்கு நரபதி செப்பலும்
வேலுங் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக்
கோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன். 42

நாற்பெரும் படையின் அளவு

ஈரெண் ணாயிரம் எண்வரை யானையும்
ஈரெண் ணாயிரம் ஈடில் புரவியும்
ஈரெண் ணாயிரமின் மணித் தேருடன்
ஈரெண் ணாயிர விற்படை யாளரே. 43

இத்தனையும் இயல்புடன் கூடியே
மெத்தெ னாவரு கென்று விடுத்துடன்
ஒத்த நற்பொறி யோங்கிய யானையும்
வத்தவன் தன் வனத்திடை வந்ததே. 44

பொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்

அவ்வ னத்தினி லான் பிடிகளும்
கவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்
மவ்வ லம்மத வண்டெழ வீசலும்
அவ்வ னச்சரர் அன்புடன் கண்டனர். 45

எம்மி றையது வேழமென எண்ணித்
தம்மில் ஓடி உதையற்கு ரைத்தலும்
கொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்
செம்மலும் சிறந் தேறி நடந்தனன். 46

உதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்

புள்ளிடை தடுப்பத்தீய பொய்குறி செய்யக்கண்டும்
வள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப்போந்து
கள்ளவிழ் மலர்க்கானத்துக்கள்ள நல்லியானை கண்டே
உள்ளமெய்மொழி கடம்மால் உணர்ந்தவன் இனியனானான். 47

நக்க ணத்தை நயந்துடன் நோக்கிலன்
அக்க ணத்தி லகமகிழ் வெய்தித் தன்
மிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்
தக்க ராகத்திற்றான் மிக வாசித்தான். 48

பொய்யானை உதயணன் பால் வருதல்

பொறியின் வேழத்தின் பொங்கு செவியுற
உறுமனத் துடனூர்ந்து முன்னே வர
மறையு மாந்தர் கைம்மாவை அழித்திடப்
பொறி கழன்றது போர்ப்படை யானதே. 49

போர் நிகழ்ச்சி

செறுநர் செய்தது சித்திர மாமென
முறுவல் கொண்ட முகத்தினனாகத் தன்
உறு வயந்த கனுற்றவைந் நூற்றுவர்
மறுவில் வீரியர் வந்துடன் கூடினார். 50

கரந்திருந்த களிற்றுனுட் சேனையும்
பரந்து முன்வந்து பாங்கில் வளைத்தபின்
விரிந்து வத்தவன் வெகுண்டுவில் நூறினான்
முரிந்து சேனை முனையின் மடிந்ததே. 51

சாலங் காயனும் சார்ந்து வெகுண்டிட
நாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்
மேலெ ழுந்து மிகவும் வளைத்தன
காலன்போல் மன்னன் கண்கள் சிவந்தவே. 52

புல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்
கொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண
வில்வாள் தம்முடன் வீரர் அழிந்திட
வல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன். 53

கொன்ற போரில் குருதிஆறு ஓடவும்
நின்ற மாந்தர்கள் நீங்கி விட்டோ டவும்
கன்றிஉள் சாலங் காயனும் மேல்வர
மன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன். 54

மந்திரீகளை மன்னர் வதை செயார்
புந்தி மிக்கோருரை பொருட் டேறித்தன்
செந்தி வாளை அழுத்திலன் செல்வனும்
அந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன். 55

உதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்

திரளுடைக்கரி சேர்ந்து வளைத்தலும்
வரைகள் வீழ்வென வாரணம் வீழவும்
நிரை மணித்தேர் நிலத்திற் புரளவும்
புரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும். 56

வெஞ்சினம் மனன் வேறணி நூறலும்
குஞ்சரத்தினற் கோட்டின் வாளொடியவத்
தஞ்ச மின்றிய தாருடை வேந்தனை
வெஞ்சொல் மாந்தர் வெகுண்டு உடன்பற்றினார். 57

நங்கை மார்சூழ னாண்மலர் சூட்டுங்கை
திங்கள் போலத் திலத மெழுதுங்கை
பொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை
பங்க யத்தடிப் பாடகம் பூட்டுங்கை. 58

கீத வீணை செங்கெந்தம் அனையுங்கை
ஈதன் மேவியிர வலர்க்கு ஆற்றுங்கை
ஏதமில் குணத்து என்முடி மன்னன்கை
போத வெண்டு கிலாற்புறத் தார்த்தனர். 59

உதயணன் வயந்தகனுக்கு ஓலையனுப்புதல்

சிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்
அலங்கல் வேலினான் அன்புடை யூகிக்கே
இலங்க ஓலை எழுதி வயந்தகன்
நலங்கொள் கையின வின்று கொடுத்தனன். 60

பிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு

காசிறேர் மிசைக் காவலுடன் செலப்
பேசரும் பெருமைப் பிரச் சோதனன்
ஆசையின் மகள் ஆடகப்பா வைபோன்ம்
வாசவ தத்தை வண்மைக் கனவிடை. 61

பொங்கி ளங்கதிர் போந்த தமளியில்
கொங்கையைத் தழீஇக் கொண்டுடன் செல
நங்கை கண்டு நற்றாதைக்கு உரைந்தனள்
அங்கந் நூலின் அறிந்தவர்க் கேட்டனன். 62

இவன்முலைக் கியைந்த நல்லெழின் மணம்மகன் வந்தே
துவளிடை இளமுலை தோய்ந்து கொண்டுபோமென
அவள் கனவுரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்தபின்
திவளுமாலைத் தேர்மிசைச் செம்மல் வந்தடைந்தனன். 63

உதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்

மன்னனை மிகவு நொந்து மாநகரிரங்கவும்
துன்னிவெஞ்சிறை மனையிற் றொல்வினை துரப்பவும்
இன்ன நற்படியிருப்பவியல் வயந்தகனும் தான்
சென்றுயூகி தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான். 64

ஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்

அண்ணன்கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்
கண்ணினீரருவிகள் கால் அலைத் தொழுகவும்
அண்ணல் ஓலைவந்த செய்திமான யூகிகேட்டுடன்
புண்ணில் வேலெறிந்தெனப் பொற்பழிந்து வீழ்ந்தனன். 65

யூகியின் கோட்பாடு

தேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை
மாறுதரக்காட்டி எம் மன்னனைப் பிடித்தனர்
வீறுதர அந்நகரை வெங்கயத் தழித்துப் பின்
கூறுமன் மகளுடன் கொற்றவனை மீட்குவம். 66

மீள்குலம் யாமென்றெணி வெகுண்டு போர்க்களத்தினில்
வாண்முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோமென
நீள்விழிநன் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக்
கோள்களைந்து புட்பகத்திற் கொண்டுவந்து வைத்தனன். 67

உருமண்ணு வாவினுடன் இடபகன் சயந்தியும்
திருநிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்கவெண்
பெருமகன்கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை
அரசுநாட்டி ஆள்கவென்றே அன்புடன் கொடுத்தனன். 68

யூகியின் சூழ்ச்சி

மன்னவற்கு இரங்கி யூகிமரித்தனன் என்வார்த்தையைப்
பன்னியெங்கணும் முரை பரப்பி வையகந்தனில்
அன்னதன தொப்புமை அமைந்ததோர் சவந்தனை
உன்னியூகி கான்விறகில் ஒள்ளெரிப் படுத்தினன். 69

யூகி அவந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்

தன்னகர் புலம்பவெங்கும் தன்னையுங் கரத்தலின்
உன்னிவந்து மாற்றரசர் ஓங்குநாடு பற்றினர்
என்றறிந்து யூகியும் இனிச்சிறையின் மன்னனைச்
சென்று அவனைக்காண்டு மென்றுதேச முன்னிச் சென்றனன். 70

துன்னருநற் கானமோடு தொன்மலையிற் சார்தலும்
செந்நெல்கள் விளைவயற் செழும்புனனதிகளும்
மன்னுநாடுந் தான்கடந்து மாகொடி நிறைந்திலங்கு
நன்னகருஞ்சேனையின்நன்கு அமைச்சன் சென்றனன். 71

உஞ்சையில் யூகியின் செயல்கள்

ஒலிகடலன்ன வோசையுஞ் சேனை தன்
புலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்
மலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க
வலியதன் சேனை வைத்தனன் அன்றே. 72

யூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்

இன்னவை கேட்கின் இன்னவை தருக என
மன்னவன் அறியும் அருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு
நன்னகர் வீதிநடுவினில் வந்தான். 73

இருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி
மருள் செயமாலை வகுத்துடன் சுற்றி
உருணிறச் சுண்ணம் உடலினிற் பூசிப்
பொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி. 74

செம்பொற் பட்டம் சேர்த்தினன் நுதலில்
அம்பொற்சாந்த மனிந்த நன் மார்பன்
செம்பொற் கச்சைச் சேர்த்தினன் அரையில்
அம்படக் கீறி அணிந்த உடையான். 75

 
மேலும் உதயண குமார காவியம் »
கோதை யுத்தரியங் கொண்ட கோலத்தன்காதிற் குழையினன் காலிற் சதங்கையன்ஊதுங் குழலினன் உனுலரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar