பதிவு செய்த நாள்
16
மார்
2013
11:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சியின் போது தொட்டம்பாளையத்தில் இருந்து பவானி ஆற்றை பரிசல் மூலம் செல்லாமல், முதன் முறையாக புதியாக கட்டியுள்ள பாலத்தின் வழியாக பவானி ஆற்றை கடந்து வெள்ளியம்பாளையம் புதூர் சென்றது. சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த திங்கட்கிழமை பூச்சாட்டும் நிகழ்ச்சி மூலம், இந்தாண்டின் குண்டம் விழா துவங்கியது. கடந்த செவ்வாய்கிழமை இரவு பண்ணாரி கோவிலில் இருந்து பண்ணாரி மாரியம்மன் வெள்ளிக்கவசத்தில் சப்பரம் மூலம் கிராமங்களுக்கு வீதி உலா துவங்கினார். சிங்கரம்பாளையத்தில் தொடங்கிய வீதி உலா புதூர், வெள்ளியம்பாளையம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு கொத்தமங்கலம் வழியாக தொட்டம்பாளையம் சென்றது. இரவு அங்குள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் தங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தொட்டம்பாளையத்தில் இருந்து பண்ணாரி மாரியம்மன் வெள்ளியம்பாளையம் புதூருக்கு பரிசல் மூலம் கடந்து செல்வது வழக்கம். அப்போது இரு பக்கத்திலும் உள்ள கரைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்று கொண்டு கை கூப்பி "மாரியம்மா என விண்ணை முட்டும்படி கோஷமிட்டு பரவசப்படுவர். ஆனால் நேற்று காலை புதிதாக கட்டியுள்ள பாலத்தின் வழியாக பண்ணாரி மாரியம்மன் உற்சவர் சப்பரத்தின் முன் பக்தர்கள் படுத்துக்கொண்டனர். அவர்கள் மீது சப்பரம் ஏறி சென்றபோது "மாரியம்மா என கோஷமிட்டனர்.
மாலையில் வெள்ளியம்பாளையம்புதூரில் வீதி உலா முடிந்து இரவு அக்கரை தத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்கியது. இன்று சனிக்கிழமை உத்தண்டியூர், அய்யன்சாலை, ரமாபுரம், தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர்நகர் வழியாக இரவு சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோவிலில் வந்து தங்குகிறது. பக்தர்களுக்கு பூசாரி ஆறுமுகம் பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். தவிர, வரும், 26ம் தேதி நடக்கும் குண்டம் விழாவில், தீ மிதிக்க வெளியூர் பக்தர்கள், 23ம் தேதியில் இருந்தே வரிசையில் நிற்க துவங்குவர். மேலும், 26ம் தேதி மாலை ஐந்து மணி வரை தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதனால் பக்தர்கள் வசதிக்கேற்ப வெயில் பாதிப்பில் இருந்து பக்தர்களை காக்க தற்போது தீ மிதிக்க வரிசையாக நிற்கும் பகுதியில், பிளாஸ்டிக் கூரை கொண்ட பந்தல் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.