பன்றிமுகத்தோடு காட்சி அளிக்கும் வாராகி, சப்த மாதர்களில் ஒருத்தியாக திகழ்கிறாள். வெற்றித் தெய்வமான இவள் சோழ மன்னர்களின் இஷ்ட தெய்வமாகத் திகழ்ந்தாள். வாராகிக்கு, மஞ்சள் ஆடை அணிவிக்கப்படும் போது, பஞ்சமி என்று பெயர் பெறுகிறாள். காசி திரிபுர பைரவி காட் என்ற இடத்திலுள்ள ஆதிவாராகி கோயில் புகழ்பெற்றது. இதை பாதாள பைரவி கோயில் என்பர். இங்கு, காலை 4 முதல் 6 மணிக்குள் பூஜை முடிந்து சூரியோதயத்துக்கு முன்பே நடை அடைத்து விடுவர். முதலில் பெண் பூஜாரிணி அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்வார். அர்ச்சனையை ஆண் அர்ச்சகர் செய்து வைப்பார். நிலக்கடலை, தேங்காய், ஏலக்காய் சேர்க்காத இனிப்பு வகைகள், வெற்றிலை, பீடா, உளுந்தால் செய்யப்பட்ட பட்சணங்களைப் படைப்பர். இவள் மிகவும் உக்ரநிலையில் இருப்பதால், சந்நிதிக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. சிறு துவாரத்தின் வழியாக மட்டுமே பார்க்கலாம். இவளை வணங்கினால் தைரியம், தொழில், வியாபாரத்தில் போட்டி குறைதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.