சும்மா இருப்பதே சுகம் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம், சோம்பேறியாக ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. கண்ணை மூடி யோகநிலையில் மவுனமாக அமர்ந்துஇருப்பவர் தட்சிணாமூர்த்தி. சனகாதி முனிவர்கள் நால்வருக்கு, சின்முத்திரை என்ற அடையாளத்தைக் காட்டி மவுனமொழியில் இவர் உபதேசம் செய்கிறார். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் விட்டால், இறைவனை அடையலாம் என்பது சின்முத்திரையின் அர்த்தம். இதை வாயால்சொல்லாமல், மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலை பெருவிரலுடன் இணைத்த நிலையே இந்த அடையாளம். தாயுமான சுவாமிகள், சும்மா யிருப்பதே சுகம் என்று தன் பாடலில் இதன் மவுனத்தைப் போற்றுகிறார். கந்தரனுபூதி பாடிய அருணகிரிநாதர், ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே என்று தன் அனுபவத்தைக் குறிப் பிடுகிறார். ஆசையாகிய சங்கிலி தூள் தூளான பின், பேசாத மவுன நிலை கைவரப் பெற்றேன் என்பது இதன் பொருள். மாதம் ஒருநாளாவது மவுன விரதம் மேற்கொண்டால், ஞானம் உண்டாகிறதோ இல்லையோ கலகம் உண்டாவதில்லை. இதையே மவுனம் கலக நாஸ்தி என்பர்.