பதிவு செய்த நாள்
20
மார்
2013
11:03
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் உள்ளிட்ட மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற இத்தலத்தில், ஆண்டு தோறும் பங்குனி புனர்பூச நாளில், நந்தியெம்பெருமான்-சுயஸாம்பிகாதேவி திருமண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவையாறிலிருந்து எழுந்தருளும், அறம் வளர்த்த நாயகி உடனமர் ஐயாரப்பர் மற்றும் திருமழபாடி சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதசாமி முன்னிலையில், நாளை 21ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், நந்தியெம்பெருமான்-சுயஸாம்பிகாதேவி திருமண உற்சவம் நடக்கிறது. நந்தி திருமணம் பார்த்தால் முந்தி திருமணம் நடக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, இத்திருமண உற்சவத்தை கண்டு களிப்பதற்காக, மாநிலம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.