சீர்காழிக்கு தென்மேற்கே அமைந்த தலம் மயிலாடுதுறை. காவிரியின் தென்கரையில் உள்ள இத்தலத்தில் அம்பிகை மயில்வடிவில் வந்து பூஜித்ததாக தலவரலாறு கூறுகிறது. சுவாமியை மாயூரநாதர் என்றும், அம்பாளை அபயாம்பிகை என்றும் அழைப்பர். மயில் வடிவில் இருக்கும் அம்பிகையின் திருவுருவம் மயிலம்மன் என்றே அழைக்கப்படுகிறது. ஐப்பசியில் நடைபெறும் திருவிழாவில் மயிலம்மன் பூஜை சிறப்பாக நடைபெறும். மயிலாடுதுறையைச் சுற்றி நான்கு வள்ளல் சிவாலயங்கள் உள்ளன. கிழக்கே விளநகரில் துறைகாட்டும் வள்ளல், மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், தெற்கே பெருஞ்சேரியில் வாக்கு காட்டும் வள்ளல், வடக்கே உத்தரமாயூரத்தில் கை காட்டும் வள்ளல் கோயில்கள் உள்ளன. வேண்டிய வரம் அருளும் வள்ளல்களாக இக்கோயில்களில் இறைவன் எழுந்தருளியுள்ளார்.