பதிவு செய்த நாள்
22
மார்
2013
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், காலை, 63 நாயன்மார்கள் வீதியுலா மற்றும் இரவு, பிரபல உற்சவமான வெள்ளித்தேர் வீதியுலா, வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக, கோவில் சன்னிதி தெருவில், பிளாஸ்டிக் பொருட்கள், பாத்திரங்கள், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில், பெரிய ராட்டினங்கள், ஐஸ்கிரீம், குல்பி ஐஸ், பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, அப்பளம், தர்பூசணி, பொரி கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், திருவிழா களை கட்டியுள்ளது. தினசரி, இரவு 12:00 மணி வரை, கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின், ஐந்தாம் நாளான காலை, வெள்ளி அதிகார நந்தி சேவை, இரவு ஸ்ரீகைலாசபீட ராவண வாகனம் உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. ஆறாம் நாளான நேற்று காலை, 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது. ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியுடன், 63 நாயன்மார்களும் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். இரவு பிரபல உற்சவமான வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், ஏகாம்பரநாதர் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார்.