பதிவு செய்த நாள்
22
மார்
2013
11:03
சென்னை: பங்குனி பெருவிழாவில், புருஷாமிருக வாகனத்தில், கபாலீஸ்வரர் திருவீதியுலா நேற்று நடந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின், நான்காம் நாள் நிகழ்ச்சியாக, மனித தலை, மிருக உடல் கொண்ட புருஷாமிருக வாகனத்தில், கபாலீஸ்வரர், நேற்று காலை, 8:30 மணிக்கு, கோவிலின் ராஜகோபுர வாயிலில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பவழக்கால் விமானத்தில், விநாயகரும், சிம்ம வாகனத்தில் கற்பகாம்பாளும், புலி வாகனத்தில் சிங்காரவேலரும், பவழக்கால் விமானத்தில், சண்டிகேஸ்வரரும், மாடவீதியை நோக்கி வெளியே வந்தனர். தொடர்ந்து, மாடவீதியில் பஞ்சமூர்த்திகளும் வீதியுலா வந்தனர். பள்ளி, அலுவலகம் செல்வோர், ஆர்வமுடன் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாடவீதியை சுற்றி உள்ளோர், தங்களின் வீடுகளுக்கு அருகே, சுவாமி திருவீதியுலா வருவதற்கு சற்று முன்னர், தண்ணீர் தெளித்து, கோலங்கள் போட்டு, சுவாமியை வரவேற்றனர். குண்டலினி சக்தியை உணர்த்தும் நாக வாகனத்தில், நேற்று இரவு, 9:00 மணிக்கு, கபாலீஸ்வரர் திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து, காமதேனு வாகனத்தில் கற்பகாம்பாளும், ஆட்டு வாகனத்தில் சிங்காரவேலரும் வீதியுலா வந்தனர்.இன்று... விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று காலை, 9:00 மணிக்கு, சவுடல் விமானத்தில் திருவீதியுலாவும், நள்ளிரவு, 12:15 மணிக்கு, வெள்விடை பெருவிழா காட்சியும் நடக்கின்றன.