பதிவு செய்த நாள்
22
மார்
2013
11:03
ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டை தெப்பக்குளத்தில், பக்தர்கள் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர், தேர்ப்பேட்டையில் சந்திசூடேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் தேர்த்திருவிழாவையொட்டி, 300 ஆண்டாக தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. இந்த குளத்தில் தண்ணீர் மாசு அடைந்து இருந்தது. இந்த தண்ணீரை வெளியேற்றி, புதிதாக தண்ணீர் விட கவுன்சிலர் ரோஜா பாண்டியன், சமீபத்தில் வாக்குறுதி அளித்து, குளத்தில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். ஆனால், தண்ணீர் நிரப்பவில்லை. அதிருப்தியடைந்த பக்தர்கள், முன்னாள் நகாட்சி தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் சப்-கலெக்டர் பிரவீன்நாயரிடம் புகார் செய்தனர். சப்-கலெக்டர், நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, கமிஷனர் இளங்கோவன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமாரிடம் தெப்ய உற்சவம் தடைப்படாமல் இருக்க குளத்தில் தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தினார். இதை சுட்டிக்காட்டி "காலைக்கதிர்நாளிதழில் செய்தி தொடர்ச்சியாக வெளியானது. இதை தொடர்ந்து, நேற்று காலை முதல் பக்தர்கள், உள்ளூர் முக்கியபிரமுகர்கள், நகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பினர் லாரிகள் மூலம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். தெப்பக்குளத்தில் லாரிகள் மூலம், 24 மணி நேரமும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.