பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழாவின், 6ம் நாளான நேற்று காலை, 63 நாயன்மார்கள் வீதியுலா கோலாகலமாக நடந்தது. ஏழாம் நாளான இன்று காலை, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா, கடந்த 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு, சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று முன்தினம் காலை, வெள்ளி அதிகாரநந்தி சேவை நடந்தது. இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கைலாசபீட ராவண வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று காலை, 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. நாயன்மார்களுக்கு முன்பாக ஏலவார்குழலியுடன், ஏகாம்பரநாதர் பவனி வந்தார். தொடர்ந்து, 63 நாயன்மார்கள் திருவீதி உலா வந்தனர்.மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, 63 நாயன்மார்கள் வீதியுலா வெகு விமரிசையாக நடந்தது. வெயிலை பொருட்படுத்தாமல், வழிநெடுக்கிலும் பக்தர்கள் திரண்டு நின்று, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 7:30 மணிக்கு, பிரசித்தி பெற்ற உற்சவமான தேரோட்டம் நடைபெற உள்ளது.செங்கல்பட்டு: இங்குள்ள ராஜாஜி தெருவில், புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள், கடந்த ஆண்டு நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த, 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.நேற்று முன்தினம், அதிகாரநந்தி வீதியுலா நடந்தது.நேற்று காலை, ”வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, 63 நாயன்மார் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று, தேர் திருவிழா நடைபெற உள்ளது. வரும் 26ம் தேதி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.