பதிவு செய்த நாள்
25
மார்
2013
10:03
மதுரை: வழிபாட்டில் எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது, என, பாரதி யுவகேந்திரா சார்பில், மதுரை வசுதரா யாகசாலை ஆன்மிகச் சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேசினார். அவரது சொற்பொழிவு: குழந்தைகளை வளர்க்கும் போது இறைவனின் மகிமை, மந்திரங்களை கூற வேண்டும். இதனால் குழந்தை, தவறான வழியில் செல்லாது. நமக்கு தெரிந்த நல்லதை பிறரிடம் கூற வேண்டும். விரதம் இருக்கும் பெண்கள், அலங்காரத்தை தவிர்க்க வேண்டும். விரதம் எளிமையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கடவுள் பெயர் சூட்டும் பெற்றோர், அதே பெயரைக் கூறி திட்டக்கூடாது; அதனால் பாவம் நம்மை சேரும். நம் பாவங்கள் நீங்க, இறைவன் நாமத்தை ஒரு முறை கூறினாலே போதும். நாம் நினைப்பவை நடப்பதில்லை; எதிர்மறையாகவே நடக்கும். நம்மைச் சுற்றியுள்ளோர் பணம் படைத்தவராக இருந்தால், அதை பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டும். பெற்றோர், பெரியோரை குழந்தைகள் மதிக்க வேண்டும். பள்ளிக்கும், தேர்வு காலங்களிலும் பெற்றோரை வணங்குவது அவசியம். எதையும் எதிர்பார்த்து இறைவனை வணங்கக் கூடாது; அதே நேரத்தில் நிபந்தனைகளும் இறைவனிடம் விதிக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது பக்தி அல்ல. பக்தனின் நிலை அறிந்து உதவுவரே கடவுள். எதற்கும் வரைமுறை உண்டு; அதன் படியே நாம் நடக்க வேண்டும், மீறக்கூடாது.