பதிவு செய்த நாள்
25
மார்
2013
11:03
பவானி: பவானி காசி விஸ்வநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. பவானியில் உள்ள விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா, மார்ச், 18ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. மார்ச், 22ம் தேதி காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் கணபதி, வள்ளி, தெய்வானை உடனமர் முருகன், விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர், அம்பிகை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்தனர். அக்ரஹார வீதி, மெயின் ரோடு, தேர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நாளை (26ம் தேதி), விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடக்கிறது. குமாரபாளையம் வீணா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் இளவரசன், ரவீந்திரன், பவானி- குமாரபாளையம் அரிமா சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் சீனிவாசன், அக்னி ராஜா, வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் வில்வமூர்த்தி, உதவிஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுப்ரமணியகுருக்கள், விழா குழுவினர் செய்து இருந்தனர்.