பதிவு செய்த நாள்
25
மார்
2013
11:03
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் கம்பத்துக்கு, புனிதநீர் ஊற்றி பக்தர்கள், அம்மனை தரிசித்தனர். ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்கள் குண்டம் திருவிழா, மார்ச், 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. மார்ச், 23ம் தேதி இரவு, 8.30க்கு, பட்டாளம்மன் சிறப்பு அபிஷேகத்துடன், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது. நேற்று, ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பெரியமாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பங்களுக்கு, புனித நீர், பால் ஊற்றி, சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்த அம்மனை வழிபட்டு சென்றனர். பெரியமாரியம்மன் வகையறா கோவில் பண்டிகையை முன்னிட்டு, மூன்று கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் நீர்மோர் பந்தல், கூழ் வழங்கப்பட்டது. ஈரோடு அ.தி.மு.க., சார்பில், பெரியமாரியம்மன் கோவில் முன், மோர், கரும்பு, ரஸ்னா, தர்பூசணி என, 19 வகையான நீர் ஆகாரங்கள் வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பங்கேற்று, நீர்மோர் பந்தலை துவக்கி வைத்தார். துணைமேயர் பழனிசாமி, மண்டல தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஈரோடு ஜவுளி பேக்கிங் லேபர் யூனியன் சார்பில் பக்தர்களுக்கு, மூவகையான சாப்பாடு அன்னதானம் வழங்கப்பட்டது. 26வது வார்டு கவுன்சிலர் பாஸ்கரன், யூனியன் பொது செயலாளர் சம்பத், துணை செயலாளர் பாலசுப்ரமணி, துணைதலைவர் செல்வராஜ், பொருளார் மோகனசுந்தரம், பாசளை மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.