பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தை ஒட்டி, திருக்கல்யாணம் நடந்தது.ஆர்.கே.பேட்டையில் பத்மாவதி,சந்தரவல்லி, விஜயவல்லி சமேதசந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கரிகால சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், பலகாலமாக பாழடைந்து கிடந்தது.கடந்த, 1984ம் ஆண்டு, சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பதி கோவிலில் உள்ளது போன்று, இங்கும் ஆனந்த நிலைய விமானம் உள்ளது.பங்குனி உத்திரத்தை ஒட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்தன. இரவு, மேளதாளங்கள் முழங்க உற்சவர்சந்தரராஜ பெருமாள், அம்பாளுடன் கோவில் வளாகத்தில் உலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.பள்ளிப்பட்டுபொதட்டூர் பேட்டை, அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகும். கடந்த, 24ம்தேதி, வேள்வி மற்றும் கொடியேற்றத்துடன், இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது. அன்றைய தினம் மாலை ஆன்மிக சொற்பொழிவும், அதை அடுத்து 2ம் நாள், தேவார திருப்புகழ் இன்னிசையும் நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று அமிர்தவல்லி அகத்தீஸ்வரர்சவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது.முன்னதாக, திருக்கல்யாணத்திற்கான மலர் மாலைகள், ஆடை ஆபரணங்கள் ஆகியவை, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதை தொடர்ந்து நடந்த திருக்கல்யாண வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் பெருமான், மங்கள இசை மற்றும் சிவபூதகண வாத்திய முழக்கங்களுடன், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது, தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காட்டி அகத்தீஸ்வர பெருமானை பக்தர்கள் வழிபட்டனர்.திருத்தணி அடுத்த, மத்தூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்து. காலை கணபதி ஹோமம், மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சிறப்பு பூஜை இதில் மத்தூர், கொட்டூர், புஜ்ஜிரெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.அதேபோல், திருத்தணி அடுத்த, தாடூர் கிராமத்தில் உள்ள யோகேஸ்வரி தேவி உடனுறை கடலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்தரவிழாவை முன்னிட்டு காலை சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்ததுமாலை, 4:00 மணி முதல், 6:30 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், 1,000க்கும் பேற்பட்டோர் பங்கேற்றனர். இரவு, 8:00 மணிக்கு திருவீதி உலாவும் நடந்தது.