பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
திருத்துறைப்பூண்டி: ஸ்ரீராமர் கோவிலில் திருமலை தீர்த்த சிறப்பு அபிஷேக பூஜை நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரின் மத்தியில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, தன் கையில் கோதண்டம் ஏந்தி நின்று, கோதண்டராமனாக காட்சியளிக்கிறார். ஸ்ரீ ராமர் கோவிலுள்ள மூல விக்ரஹங்கள் அனைத்தும், திருமலை திருப்பதி கபில தீர்த்த மலையடிவாரத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த, 2002ம் ஆண்டு மார்ச், 27ம் தேதியன்று, ஸ்ரீராம, ஜெயராம மூல மந்திர எழுத்தின் எண்ணிக்கையில், 13 ராம விக்ரஹங்கள் உருவாக்கப்பட்டன.
திருமலையிலிருந்து தீர்த்த அபிஷேகம் எடுத்து வரப்பட்டு, நேற்றுக்காலை ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், பஞ்சமுக ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியவற்றுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மேலும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஏற்பாட்டை ஸ்ரீ ராமநாம வழிபாட்டு சபை சார்பில், துளசிதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.