பதிவு செய்த நாள்
28
மார்
2013
10:03
கும்பகோணம்: நாகேசுவர ஸ்வாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர். பாடல்பெற்ற பல சைவத்திருக்கோவில்களையும், மங்களா சாசனம் பெற்ற பல வைணவத் திருக்கோவில்களையும் ஒருங்கே கொண்டு விளங்கப்பெறும், கும்பகோணம் நகரின் மத்தியில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்றழைக்கப்படும் பிரகன்நாயகி சமேத நாகேசுவரஸ்வாமி கோவில் மிக முக்கியமான சிவன்கோவிலாகும். பிரளய காலத்தில் அமிர்த குடம் உடைந்தபோது, வில்வம் விழுந்த இந்த இடத்தில் சிவபெருமான் எழுந்தருளி, வில்வனேசர் எனும் பெயருடன் திகழ்கிறார். பின்னர் உலக பாரதத்தைத் தாங்க சக்தியற்ற நாகராஜன், வில்வநேசரை பூஜித்து பலன் கிடைத்ததால், நாகராஜன் வேண்டுகோளுக்கிணங்க நாகேஸ்வரர் என பெயர் பெற்றார் என்பது புராண வரலாறு. இத்தகைய சிறப்புடைய இக்கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா கடந்த, 17ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு படிச்சட்டத்தில் ஏகாந்தக்காட்சியில் ஸ்வாமி அருள்பாலித்தார். இன்று வரை நடைபெற உள்ள இவ்விழா நாட்களில், காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு, 23ம் தேதி திருக்கல்யாணமும், அடுத்தநாள் வெண்ணைத்தாழி அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து கடந்த, 25ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் நாகேஸ்வரஸ்வாமி, பிரகன்நாயகி அம்பாளுடன் எழுந்தருளினார். பின், 9 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்து, மதியம், 12 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.